முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி கடனுதவியாக மத்திய அரசு வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.


பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 08, ஏப்ரல் 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி கடனுதவியாக மத்திய அரசு வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.


இது ஒரு சாதனை என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து தகவல்களைப் பதிவிட்டுள்ளார். 


அதில் அமித் ஷா, கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி பெண்கள் வளர்ச்சி என்பதை வெறும் வாய் வார்த்தையாகக் கூறவில்லை. அதை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். பெண்கள் இப்போது விண்வெளி முதல் பாதுகாப்பு வரை தேசத்தை முன்னோக்கி செலுத்துகின்றனர். முத்ரா கடன் மூலம் பெண் சக்திகள் இன்று தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றனர். என்று குறிப்பிட்டுள்ளார்.






பிரதமரின் முத்ரா திட்டத்தின் முக்கிய அம்சங்கள் (PMMY):
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதியுதவி நிறுவனங்கள், இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள், ‘சிஷூ’, ‘கிஷோர்’ மற்றும் ‘தருண்’ ஆகிய 3 பிரிவுகளில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இது கடன் வாங்குவோரின் நிதி தேவை மற்றும் முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின் நிலையை குறிக்கிறது.


சிஷூ: ரூ.50,000/- வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
 கிஷோர்: ரூ.50,000-க்கும் மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
தருண்: ரூ. 5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள் இதில் அடங்கும்.
புதிய தலைமுறையைச் சேர்ந்த முன்னேற்றத்தை விரும்பும் இளைஞர்களிடையே தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், சிஷூ பிரிவு கடன்கள் வழங்குவதுடன் அதன் தொடர்ச்சியாக கிஷோர் மற்றும் தருண் பிரிவுகளிலும் அதிக கவனம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.
விதிமுறைகளுக்கு உட்பட்டு சிஷூ, கிஷோர் மற்றும் தருண் திட்டங்களின் மூலம் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஒட்டு மொத்த நோக்கமாக கொண்டு, பல்வேறு துறைகள் / வர்த்தக நடவடிக்கைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முத்ரா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணை, பால்பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட உற்பத்தி, வர்த்தக மற்றும் சேவை துறைகளின் வருவாய் திரட்டும் நடவடிக்கைகளுக்காக காலவரம்புடன் கூடிய கடன் மற்றும் செயல் முதலீடு போன்ற நிதியுதவிகளை பூர்த்தி செய்வதற்காக பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.


இந்த கடன்களுக்கான வட்டி விகிதம், ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடன் வழங்கும் நிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது. செயல் முதலீட்டை பொறுத்தவரை, கடன்தாரர் ஒரு இரவு முழுவதும் வைத்திருக்கும் பணத்திற்கு மட்டும் வட்டி விதிக்கப்படும்.