கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.


பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம்:


இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. அதில், பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 370 மக்களவை தொகுதிகளை கட்சித் தொண்டர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்" என்றார்.


கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் இப்போதே தனது வாக்குச் சாவடியில் கவனம் செலுத்தி, பாஜக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை வாக்காளர்களுக்கு எடுத்துச் சொல்லி, கடந்த முறை தனது கட்சிக்குக் கிடைத்த தொகுதிகளை விட 370 தொகுதிகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.


கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை செய்தியாளர்களிடம் விளக்கி பேசிய பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, "கட்சியின் மக்களவை வேட்பாளர்களின் பெயர்களை மோடி அறிவித்திருக்கிறார். தாமரையே கட்சியின் வேட்பாளர். கட்சி சின்னத்தை மட்டுமே கட்சிப் பொறுப்பாளர்களும் தொண்டர்களும்  பார்க்க வேண்டும். வேறு எதையும் பார்க்க கூடாது.


ஸ்கெட்ச் போட்டு தந்த பிரதமர் மோடி:


தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தேவையற்ற, உணர்ச்சிகரமான பிரச்னைகளை எழுப்புவார்கள். ஆனால், வளர்ச்சி, ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் உலகளவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் உயர்வான இடம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு கட்சி தொண்டர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.


கட்சியால் பலவீனமான இடங்களாக கருதப்படும் தொகுதிகள் அதாவது கட்சி இதற்கு முன் வெற்றி பெறாத இடங்களிலிருந்து தங்களால் இயன்ற இடங்களை வெல்ல பாஜக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்" என்றார்.


பாஜகவின் முன்னோடியாக கருதப்படும் ஜனசங்க கட்சியை தொடங்கியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அரசியலமைப்பு பிரிவு 370இன் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடுமையாக எதிர்த்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக, அரசியலமைப்பு பிரிவு 370ஐ நீக்கியது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: Election 2024: பாசிசம் வீழும்! I.N.D.I.A வெல்லும்! அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!