குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது போல கேமரா இருக்குமிடமெல்லாம் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்க்கலாம். நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு அடுத்து கேமிராவை மிகவும் நேசிக்கும் நபர் என பிரதமர் நரேந்திர மோடியைச் சொல்லலாம். பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் உடனான சந்திப்பில் அவர் நரேந்திர மோடியை நோக்கிய கேமிராவை மறைத்தபடி நின்றார் என்பதற்காக ‘தம்பி!அப்படிக் கொஞ்சம் தள்ளி நில்லுங்க!’ என்னும் வகையிலாக அவரை ஓரமாகத் தள்ளிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது இதற்கு நல்ல உதாரணம்.



கேமிராவை மறைத்தபடி தனது செக்யூரிட்டி நின்றதற்காக கோபப்பட்டு திட்டிய வீடியோ ஒன்றும் வைரலானது. 



இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அப்டேட் செய்யும் இளசுகள் நிறைந்த இந்தக் காலத்தில் நாட்டின் பிரதமர் கேமிரா விரும்பியாக இருப்பதில் ஒன்றும் தப்பில்லையே! ஆனால் அவரின் இந்த கேமிரா ஆசை இன்று நேற்று அல்ல அவரது இளமைக்காலத்திலிருந்தே உண்டானது. நாட்டின் பிரதமராக அறியப்பட்ட நரேந்திர மோடி ஒரு நல்ல நாடக நடிகரும் கூட. இதைப் பற்றி எம்.வி காமத் எழுதிய நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்று  புத்தகமான ‘ தி மேன் ஆஃப் தி மொமன்ட்ஸ்’ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்னும் தனது புத்தகத்தில் மோடியே இதுபற்றி பதிவு செய்திருக்கிறார். 


’மஞ்சள் பூ’ எழுதிய மோடி


அரசியலுக்கு வரவில்லையென்றால் இந்நேரம் பாலிவுட்டில் அனுபம்கேருக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கான நடிகர் ஆகியிருப்பார் நரேந்திர மோடி. அரசியல் ஆர்வத்துக்கு முன்பே அவரிடம் நடிக்கும் ஆர்வம் இருந்தது. சிறுவயதில் ஒரு நாடகத்தில் நடித்ததைப் பற்றி தனது அந்த எக்ஸாம் வாரியர் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நாடகத்தின் தலைப்பு ‘பீலே ஃபூல்’ அதாவது மஞ்சள் பூ. ஒரு தாய் தனது நோய்வாய்ப்பட்ட மகனை குணப்படுத்துவதற்காகக் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் இருக்கும் மஞ்சள் பூவை கேட்கிறார். அவள் பிறப்பால் தீண்டத்தகாதவள். கோயில் பூசாரி முதலில் பூவைத் தரமறுக்கிறார். அவள் கெஞ்சிக் கதறுகிறாள். பிறகு மனமிறங்கி பூவைத் தருகிறார் பூசாரி. 1963-64ல் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி அவரே எழுதிய நாடகம். இந்த நாடகத்தில் நடித்தும் இருந்தார் மோடி. கடவுள் முன் அனைவரும் சமம் என்கிற வகையில் அந்த நாடகம் முடிந்திருக்கும்.ஒரு நல்ல நடிகரை பாலிவுட் இழந்தாலும் நாடு பிரதமரைச் சம்பாதித்துள்ளது. நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Also Read: தான் பெற்ற நினைவு பரிசுகளை ஏலத்திற்கு விடும் பிரதமர் மோடி: நிதி முழுவதும் கங்கை தூய்மைக்கு ஒதுக்க முடிவு!