Mobile Phone Manufacturing: இந்தியாவில் நடைபெறும் செல்போன் உற்பத்தி தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
1,700% அதிகரித்த செல்போன் உற்பத்தி:
இந்தியாவில் செல்போன் உற்பத்தி பெரும் ஏற்றத்தை கண்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தின் படி, 2014-15ல் காலகட்டத்தில் ரூ.18,900 கோடியாக இருந்த உள்நாட்டு செல்போன் உற்பத்தியின் மதிப்பு, 2022-2023ல் சுமார் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 1,700 சதவிகிதம் அளவிற்கு இந்தியாவில் செல்போன் உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி அளவின் அடிப்படையில், செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.
மின்சாதன துறையில் இந்தியா..!
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் பேசுகையில், “உலகளாவிய மின்சாதன விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் நிலை கிட்டத்தட்ட முக்கியமில்லாத நிலையில் இருந்து, உலகளாவிய மின்னணு மதிப்புச் சங்கிலியில் (ஜிவிசி) கணிசமான மற்றும் நம்பகமான பங்கேற்பாளராக குறைந்த காலகட்டத்திலேயே உருவாகியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை இறக்குமதி செய்யும் இடத்திலிருந்து ஏற்றுமதி செய்யும் அமைப்பாக மாற்றுவதற்காக, மொபைல் போன்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதற்காக மெக்கானிக்கல், டை-கட் பாகங்கள் மற்றும் பிற வகைகளின் கீழ் உள்ள பொருட்களின் அடிப்படை சுங்க வரியை 10 சதவீதமாக (15 சதவீதத்திலிருந்து) அரசாங்கம் குறைத்துள்ளது. மொபைல் போன்களின் ஏற்றுமதியும் 2014-15 இல் மதிப்பிடப்பட்ட ரூ. 1,566 கோடியிலிருந்து, 2022-23 இல் ரூ. 90,000 கோடியாக உயர்ந்துள்ளது, இதனால் ஏற்றுமதியானது 5,600 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது” என கூறினார்.
அரசின் எதிர்கால திட்டங்கள்:
மின்சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை 75 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து, 300 பில்லியன் டாலராக உயர்த்தும் திட்டம், நாடு முழுவதும் மின்சாதனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதையும் தீவிரப்படுத்துவதையும் சார்ந்துள்ளது. மொபைல் போன்களுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிஎல்ஐஐ ஐடி ஹார்டுவேர் மற்றும் சர்வர்களுக்கு விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது குறிப்பிட்ட துறைகளுக்கான முதலீடுகளை ஊக்குவித்து தேவையான உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் சூழல் உருவாகும். அதன் மூலம் விநியோகச் சங்கிலியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.
"சிப்செட்கள் உள்ளிட்ட முக்கிய கூறுகளை உருவாக்குவதற்கும், தொழில்துறைக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும் நாட்டில் உள்ள திறன்களை ஊக்குவித்து இயக்குவதன் மூலம் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மையம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ESDM) ஆகியவற்றுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த அரசாங்கம் எண்ணுகிறது” என்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.