மிசோரம் மாநிலத்தில் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ்ஏஎஃப் எனப்படும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களை பாதிக்குமா என்பது குறித்து கால்நடைத்துறை முக்கிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் ஒரு பன்றியில் இருந்து அடுத்த பன்றிக்கு உமிழ்நீர், சுவாச குழாய் மற்றும் பூச்சிகள் பாதிக்கப்பட்ட பன்றிகளை கடித்த பிறகு உயிருடன் இருக்கும் பன்றிகளை கடிப்பதன் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளது. இறந்த பன்றிகளை மற்ற பன்றிகள் உண்ணும்போது வைரஸ் அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு தடுப்பூசி கிடையாது. மிசோரம் மாநிலத்தில் இந்த வகையான ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டு ஏற்பட்டது. இதில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதன்பிறகு புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு புதிதாக தற்போது மீண்டும் அம்மாநிலத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது. கிழக்கு மிசோரமின் சம்பாய் நகரில் சில பன்றிகளின் இறப்புக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சம்பாய் நகர் அதனை சுற்றிய பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர மிசோரம், மணிப்பூர் எல்லையில் உள்ள சகவர்தாய் கிராமத்திலும் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம தலைவர் சங்கதன்குமா பேசுகையில், ‛‛இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன'' என கூறியுள்ளார். இதனால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாநில கால்நடை பாராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் லால்மிங்தங்கா கூறுகையில், "சில கிராமங்களில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பால் பன்றிகள் இறப்பு பதிவாகி உள்ளது'' என்றார். இருப்பினும் பன்றிகளின் இறப்பு குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. இதுதொடர்பாக இன்று அம்மாநில தலைமை செயலாளர் ரேணு ஷர்மாவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு முழுவிபரங்கள் வெளிவர உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும், அதேநேரத்தில் இது பன்றிகளை அதிகமாக கொன்றுவிடும் எனவும் கால்நடைத்துறை கூறுகிறது. இதனால் மிசோரம் மாநில கால்நடைத்துறையினர் அதிக கவனம் செலுத்தி தடுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டில் மட்டும் மிசோராம் மாநிலத்தில் 33 ஆயிரத்து 417 பன்றிகள் ஆப்பரிக்கன் பன்றிக்காய்ச்சலாம் இறந்தன. இதற்கு ரூ.60.82 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கையாக 10,910 பன்றிகளும் அழிக்கப்பட்டன. இந்த பேரிழப்புக்கு வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள் தான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது வங்கதேச எல்லையில் உள்ள தெற்கு மிசோரமின் லுங்கேய் மாவட்டம் லுங்சென் கிராமத்தில் தான் 2021 மார்ச் 21ல் முதல் முதலாக ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பதிவானது. அதன்பிறகு இது வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.