சமீபத்தில் `மிஸ் யூனிவெர்ஸ் 2021’ பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்துவைத் தேடிய இந்தியர்கள் தற்போது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 70-வது மிஸ் வேர்ல்ட் பட்டத்திற்கான இந்தியப் போட்டியாளர் யார் என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே 70வது மிஸ் வேர்ல்ட் பட்டத்திற்கான இந்தியப் போட்டியாளர் மானசா வாரணாசி குறித்து இங்கு பார்ப்போம். 


கடந்த 2020ஆம் ஆண்டு `மிஸ் இந்தியா’ பட்டத்திற்கான அழகுப் போட்டியில், `மிஸ் இந்தியா’ பட்டம் வென்றவர் மானசா வாரணாசி. அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஃபல்குனி ஷேன் பீகாக், நேஹா தூபியா, சித்தரங்கதா சிங், புல்கிட் சாம்ராட் ஆகியோர் கலந்துகொண்டனர். 


யார் இந்த மானசா வாரணாசி?



ஹைதராபாத்தில் பிறந்த மானசா வாரணாசி தொழில்முறையாக நிதித் தகவல் பரிமாற்றுத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். 23 வயதான இவர் வர்த்தகத் துறையில் சிறப்பான இடம்பெற்றவராக வலம் வருகிறார். வாசவி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் மானசா வாரணாசி. 


`மிஸ் இந்தியா’ போட்டியில் மானசா வாரணாசி பங்கேற்ற போது, அவருடைய குழந்தைப் பருவம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் குழந்தையாக இருந்த போது பெரிதும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்ததாகவும், தன்னை பரத நாட்டியம், இசை ஆகிய கலைகளின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்குப் புத்தகங்கள், இசை, யோகா முதலானவற்றின் மீது ஆர்வம் அதிகம். 






சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், `இந்தியா, `மிஸ் வேர்ல்ட் 2021’ போட்டியில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். 



தன் தாய், பாட்டி, தங்கை ஆகிய மூவரும் தன் வாழ்க்கையின் தன்னைச் செதுக்கும் மனிதர்களாகக் குறிப்பிட்டுள்ளார் மானசா வாரணாசி. 


சமீபத்தில் பேட்டி ஒன்றில், `அழகுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிலேயே ப்ரியங்கா சோப்ரா தனித்து தெரிவதற்குக் காரணம் அவரின் குணமே காரணம்., அவர் தன் எல்லைகளைத் தாண்டி, வெவ்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ளார். கூச்ச சுபாவத்துடன் வளர்ந்த குழந்தையாக, என்னை வெளிப்படுத்திக்கொள்ள நான் விரும்பிய போது, நான் எப்போதும் ப்ரியங்கா சோப்ராவையே ஆதர்சமாகக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார் மானசா வாரணாசி.