உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய நபர் குறித்து முதலமைச்சருக்கு 9 ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. குறிப்பாக வடமாநிலங்கள் அதிகப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் குழந்தை திருமணத்திற்கு தென்மாநிலங்களில் ஒரு முற்றுப்புள்ளி மாநில அரசுகளால் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதிலும் வடமாநிலங்களே முன்னணியில் உள்ளது.
அந்த வகையில் 9 ஆம் வகுப்பு மாணவி தன்னை ஒருவர் திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கன்னாஜின் மாவட்டத்தின் சிப்ரமாவ் காவல் நிலையப் பகுதியின் காஷிராம் காலனியில் வசிக்கும் அந்த சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு இளைஞர் தன்னை துரத்தி துரத்தி திருமணம் செய்துக் கொள்ளுமாறு டார்ச்சர் செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்த சிறுமி அவர் தனது தாயிடம் கூறியுள்ளார். உடனடியாக தாய் உறவினர்களோடு குற்றம் சாட்டப்பட்ட முகமட் சக்லைனின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் அவளை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டினார்.ஆனால் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்ட சக்லைனுக்கு ஆதரவாக சிறுமியை திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர்.
மேலும் அந்த நபர் தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து உள்ளூர் போலீசாரிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் சக்லைன் மீது எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தான் சிறுமி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால் கன்னாஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.