உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் "சிந்தனை முகாம்" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய ஆய்வு மாநாட்டை இன்றும் நாளையும் மத்திய அரசு நடத்துகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்துகிறது.
விளிம்புநிலை சமூகங்களின் மேம்பாடு:
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சமூக நீதி / சமூக நலத் துறைகளின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, நாடு முழுவதும் உள்ள விளிம்புநிலை சமூகங்களின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கும்.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார், இணையமைச்சர்கள் பி.எல். வர்மா மற்றும் ராம்தாஸ் அத்வாலே மற்றும் பிற மூத்த அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள்.
முக்கிய சமூக நீதித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் மாநில / யூனியன் பிரதேச அளவில் அவற்றின் செயலாக்கம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதே மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், திறம்பட செயல்படுத்துவதற்கான சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கவும் இந்த முகாம் முயல்கிறது.
பாஜகவின் திட்டம் என்ன?
சிந்தனை முகாம் என்பது பல்வேறு பங்குதாரர்களிடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு தளமாகும். இந்த இரண்டு நாள் மாநாடு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சிறந்த நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதுடன், திட்ட அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளையும் நிவர்த்தி செய்யும்.
ஊடாடும் அமர்வுகள் மற்றும் விவாதங்கள் மூலம், இந்த மாநாடு எதிர்கால சமூக அதிகாரமளித்தல் முயற்சிகளுக்கான ஒரு செயல்திட்டத்தை வழங்குவதுடன், அவற்றின் பரவல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உத்திகளையும் உருவாக்கும்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தலித் மற்றும் பழங்குடி மக்கள், இந்தியா கூட்டணிக்கு வாக்களித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், சமூக நீதித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க தேசிய மாநாடு நடத்தப்பட உள்ளது.