Rahul Gandhi: இந்திய அரசு உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


ராகுல் காந்தி அமெரிக்க பயணம்:


நான்கு நாள் பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது டல்லாஸ், டெக்சாஸ் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகிய இடங்களில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் இளைஞர்களுடன் உரையாட திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


”சீனா வசம் ஒப்படைக்கப்பட்ட உற்பத்தி துறை”


நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “மேற்கத்திய நாடுகளில் வேலைவாய்ப்புப் பிரச்னை உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்புப் பிரச்னை உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளில் வேலைவாய்ப்புப் பிரச்னை இல்லை. சீனாவில் நிச்சயமாக வேலைவாய்ப்புப் பிரச்னை இல்லை. 1940கள், 50கள் மற்றும் 60களில் அமெரிக்கா, உலகளாவிய உற்பத்தியின் மையமாக இருந்தது. தயாரிக்கப்பட்ட அனைத்தும், கார்கள், வாஷிங் மெஷின்கள் அல்லது தொலைக்காட்சிகள் அனைத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. அமெரிக்காவிலிருந்து உற்பத்தியானது கொரியாவுக்குச் சென்றது, அது இறுதியில் சீனாவுக்குச் சென்றது. ஆனால் தற்போது சீனா உலக உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது. காரணம் மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா  போன்ற நாடுகள், உற்பத்தி யோசனையை கைவிட்டு அதை சீனாவிடம் ஒப்படைத்துள்ளன.


”உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும்”


உற்பத்திச் செயல் வேலைகளை உருவாக்குகிறது. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? அமெரிக்கர்கள் என்ன செய்கிறார்கள்? நாம் நுகர்வை மட்டுமே ஏற்பாடு செய்கிறோம். உற்பத்தி மற்றும் உற்பத்தியை ஒழுங்கமைக்கும் செயல் பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும்"


”உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்”


உற்பத்தியை ஊக்குவிக்காத வரை, நாம் அதிக அளவிலான வேலையின்மையை எதிர்கொள்வோம். உற்பத்தியை மறந்து தற்போதைய பாதையில் நாம் சென்றால்,  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் சமூக பிரச்னைகள் எழும்.  பிரச்சனைகள் நமது அரசியலின் துருவமுனைப்புக்குக் காரணமாக அமையும்.


”இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை”


இந்தியாவில் போதிய திறமைகள் இல்லை என பலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படி நினைக்கவில்லை. திறன் கொண்டவர்களை இந்தியா மதிக்கவில்லை. தொழில் பயிற்சி மூலம் கல்வி முறையை வணிக முறையுடன் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது கல்வி முறையின் மிகப்பெரிய பிரச்சனை கருத்தியல் பிடிப்பு, அதன் மூலம் சித்தாந்தம் ஊட்டப்படுகிறது.


உற்பத்திக்காக இந்தியா தன்னை ஒழுங்கமைத்து கொள்ளத் தொடங்கினால், திறன்களை மதிக்கத் தொடங்கினால், சீனாவை இந்தியா எதிர்கொள்ள முடியும். எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதை ஏற்கனவே காட்டியுள்ளன. புனே காட்டியுள்ளது. மகாராஷ்டிரா அதை செய்து காட்டியுள்ளது. எனவே அவசியமானதை இந்திய மாநிலங்கள் செய்யவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், தேவையான அளவிற்கு பெரிய அளவில் இந்தியா செய்யவில்லை என்பதே உண்மை. ” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.