கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1.68 லட்சம் கோடி ரூபாய் பணம் ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை இதுவே அதிகமான வசூல் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 20 அன்று, அனைவரும் தங்கள் வரி பாக்கியை முழுவதுமாக செலுத்திவிட வேண்டும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்ததால், கடந்த ஏப்ரல் 20 அன்று வரலாறு காணாத அளவில் வரி வசூல் கிடைத்திருப்பதாகவும், அன்றைய நாளின் மாலை 4 முதல் 5 மணி வரை வரி வசூல் உச்சத்தில் இருந்ததாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்றைய ஒரு நாளில் சுமார் 9.58 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுள் சுமார் 57.84 கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 20 அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, சுமார் 88 ஆயிரம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், தற்போதைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சுமார் 20 சதவிகிதம் கூடுதலாக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மீதான வரி வருவாய் சுமார் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த வருவாய் சுமார் 17 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், நாடு முழுவதும் சுமார் 6.8 கோடி ஈ-பில்கள் தயாரிக்கப்பட்டதாகவும், கடந்த மார்ச் மாதம், சுமார் 7.7 கோடி ஈ-பில்கள் தயாரிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றம் நாடு முழுவதும் வர்த்தகம் மீண்டும் வளர்ந்து வருவதைக் குறிப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
`வரித்துறையின் நிர்வாகத் திறனின் காரணமாகவும், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாகவும், வரி செலுத்துபவர்களால் நேர்மையாக வரி செலுத்தப்பட்டிருப்பதோடு, வரி செலுத்த தவறுபவர்களை தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலானவற்றின் மூலம் நடவடிக்கைகள் மேற்கோள்ளவும் வைத்திருக்கிறது’ எனவும் மத்திய நிதியமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.