Congress Election : சசிதரூர் - மல்லிகார்ஜூன் கார்கே நேரடி போட்டி...! காங்கிரஸ் தலைவர் ஆகப்போவது யார்..?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சசி தரூர் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சசி தரூர் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மற்றொரு மூத்த தலைவரான திக்விஜய சிங், போட்டியிலிருந்து விலகியுள்ளதால், தலைவர் பதவிக்கான தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 

Continues below advertisement

 

காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளதால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கே, அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, நேற்று அவர், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் முதலமைச்சர்களான பூபிந்தர் சிங் ஹூடா, திக்விஜய சிங் மற்றும் பிருத்விராஜ் சவான், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, செய்தித் தொடர்பாளர் ஏ.எம். சிங்வி, முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கன் ஆகியோர் கார்கேவின் பெயரை முன்மொழிந்தனர்.

நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்ததால் தரூரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மூன்றாவது வேட்பாளராக போட்டியில் களமிறங்கிய ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியின் வேட்புமனு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரை முன்மொழிந்தவர்களில் சிலரின் கையொப்பங்கள் பொருந்தாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

வியாக்கிழமை தனது வேட்பு மனுக்களை பெற்று கொண்ட திக்விஜய சிங், நேற்று காலை கார்கேவை சந்தித்த பின்னர் போட்டியில் இருந்து விலகினார். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், கார்கேவை சந்தித்துள்ளார். பின்னர், கார்கே போட்டியிடுவதை தலைமை விரும்புவதாக அவரிடமே தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இதில், நடுநிலையாக இருப்போம் என காந்தி குடும்பம் தெரிவித்தபோதிலும், கார்கேவுக்கு தலைமையின் ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியதாக ராஜஸ்தான் முதலமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் முன்னதாக தெரிவித்திருந்தார்.

கெலாட்டுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள், ராஜஸ்தானில் தலைமைக்கு எதிரான நிலைபாட்டை எடுத்த நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பை ஏற்று இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்காக சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெளிவுப்படுத்தியுள்ளார். டெல்லியில் சோனியை காந்தியை சந்தித்ததை அடுத்து, கெலாட் செய்தியாளர்களிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "அவர் முதலமைச்சராக நீடிப்பாரா என்பதை சோனியா காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மன்னிப்பு கோரியதன் மூலம் முதலமைச்சர் பதவியை அசோக் கெலாட் தற்போதைக்கு தக்க வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியின் காரணமாக முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

காங்கிரஸ் மேலிடம், இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு முதலமைச்சர் பதவியை அளிக்க திட்டமிட்டிருந்தனர். முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு அளித்தால் ராஜினாமா செய்து விடுவோம் என கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள 90 எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்தனர். இதற்கு பின்னணியில் கெலாட் இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு நடுவில் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய அசோக் கெலாட் மீது காங்கிரஸ் தலைமை கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கெலாட், முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்தது தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Continues below advertisement