நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி பிட் இந்தியா அதாவது ஆரோக்கியமான இந்தியா என்ற இயக்கத்தை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா, தேசிய விளையாட்டு தினமான இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார்.  மேலும், டெல்லி விளையாட்டுத்துறை அமைச்சரும் பங்கேற்றனர்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் “பிட் இந்தியா” என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார். அனுராக் தாக்கூர் அறிமுகப்படுத்திய இந்த பிட் இந்தியா என்ற செயலி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ஒருவரின் உடலின் ஆரோக்கிய நிலையை எளிதில் கண்டறிய முடியும். இது ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்.





இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகாவின் முக்கியத்துவம் குறித்து உணர்த்துவதற்காக அனைவரது முன்னிலையிலும் யோகா செய்தார். இதையடுத்து, உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அவர் அனைவரின் முன்பாகவே ஸ்கிப்பிங் ஆடினார்.






அதுவும் நீண்ட நேரமாக ஸ்கிப்பிங் ஆடியும், வித விதமாக ஸ்கிப்பிங் செய்தும் அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஸ்கிப்பிங் செய்து முடித்ததும் அனைவரும் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஹாக்கியின் லெஜண்ட் தயான்சந்திற்கு புகழாரம் சூட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி மாநில அமைச்சர் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.





பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி வைத்த ஆரோக்கியமான இந்தியா என்ற திட்டத்தின் முதலாவது ஆண்டு விழா கடந்த வருடம் கொண்டாடப்பட்டது. அப்போது, பிரதமர் இந்த திட்டத்தின் கீழ் மூன்று வயது பிரிவினருக்காக ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகாட்டு முறைகளை வெளியிட்டார். இதன்படி, 5 முதல் 18 வயது வரை இருப்பவர்கள் பிரிவாகவும், 18 வயது முதல் 65 வயது வரை ஒரு பிரிவினராகவும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவினராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக் தாக்கூர் கடந்த 2008ம் ஆண்டு முதல் மக்களவை உறுப்பினராக பதவி வித்து வருகிறார். கடந்த 1974ம் ஆண்டு பிறந்த அனுராக் தாக்கூருக்கு தற்போது 46 வயதாகிறது. அனுராக் தாக்கூர் முன்பு மத்திய நிதி இணையமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : Madhya Pradesh | லாரியில் கட்டி இழுத்து செல்லப்பட்ட நபர்.. கொதிப்பு அடங்காத சோஷியல் மீடியா!