71 சதவீத இந்தியர்களால் சரிவிகித சத்தான உணவை உட்கொள்ள முடியவில்லை என்று ஒரு ஆய்வறிக்கை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியன இன்னும் பலருக்கும் எட்டா உணவுகளாக இருக்கின்றன என்று தெரியவந்துள்ளாது. ஒரு நபரின் வருமானத்தைவிட உணவின் விலை 63% அதிகமாக இருந்தால் அவருக்கு அது எட்டாத உணவாகிவிடுகிறது.


இது குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் டவுன் டூ எர்த் என்ற பத்திரிகையில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 71% இந்தியர்களுக்கு சத்தான சரிவிகித உணவை எட்ட முடியவில்லை என்று தெரிகிறது. சர்வதேச அளவில் இது 42% ஆக உள்ளது.


ஒரு சராசரி இந்தியரின் உணவில் பழங்கள், காய்கறிகள், பருப்புகள், உலர் கொட்டைகள், முழு தானியங்கள் இருப்பது அரிதாக உள்ளது. அதேவேளையில் மீன், பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி உட்கொள்வது இலக்கை எட்டும் அளவில் உள்ளது என்று குளோபல் நியூட்ரிஷன் ரிப்போர்ட், 2021ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிவிகித ஊட்டச்சத்து இல்லாத உணவால் நுரையீரல் பிரச்சனை, சர்க்கரை வியாதி, புற்றுநோய், பக்கவாதம், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியர்களுக்கு ஏன் சரிவிகித ஊட்டச்சத்து எட்டாக்கனியாக உள்ளது:


உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றின் படி, ஒரு தனி நபரின் வருவாயைவிட 63% அதிக செலவாகக் கூடியதாக இருந்தால் அந்த உணவு அவருக்கு எட்டாத உணவாகிவிடுகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் அன்றாடம் 200 கிராம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்றால் வசதி இல்லாதவர் 35.8 கிராம் மட்டுமே உட்கொள்கிறார். அதேபோல் 300 கிராம் காய்கறி சாப்பிட வேண்டுமென்றால் வசதியில்லாதவர் 168.7 கிராம் மட்டுமே சாப்பிடுகிறார். தானியங்களில் அன்றாடம் 24.9 கிராம் மட்டுமே உட்கொள்கிறார். இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 25% குறைவு. நட்ஸ் வகையறாக்களை வெறு 3.2% மட்டுமே உட்கொள்கிறார். இது 13% குறைவு என்று அந்த ஆய்வறிக்கையில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் ஊட்டச்சத்தான உணவு பழக்கத்தில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டாலும் கூட அது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. அதனாலேயே இன்றளவும் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணவீக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு:
கடந்த ஆண்டு கன்ஸ்யூமர் ஃபுட் ப்ரைஸ் இன்டக்ஸ் ஆனது  327% சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும் பங்கு உணவுக்கே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் உணவுப் பொருட்களின் விலை இன்னும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.