இந்தியாவில் பில் கேட்ஸ்:
பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா வந்தடைந்த பில்கேட்ஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், பிரதமர் மோடி, ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்தித்தார்.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஏஐ தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்டவற்றை குறித்து கலந்துரையாடினார். முன்னதாக, ஓடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் உள்ள குடிசை பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் நகரில் சாலையோர டீ கடையில் டோலி சாய்வாலாவின் கைவண்ணத்தில் தயாரான தேநீரை பருகினார்.
இது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் பில் கேட்ஸ். அந்த பதிவில், "எளிமையான ஒரு கப் தேநீரில் துவங்கி, இந்தியாவில் எங்கு திரும்பினாலும் புதுமையை பார்க்க முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில், ‘ஒரு சாய் ப்ளீஸ்’ என்று கேட்கிறார். அவரின் தனித்துவமான டீ தயாரிக்கும் முறை ரசித்தவாறே.. அவருடன் உரையாடலுன் டீ பருகும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ சுமார் 4 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது
டீ விற்ற டீக்கடைக்காரர் சுவாரஸ்யம்:
இந்த நிலையில், பில் கேட்ஸ்க்கு டீ விற்ற அனுபவத்தை அந்த நபர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, "அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்று தான் எனக்கு தெரியும். அவர் யார்? எங்கிருந்து வந்தவர் என்று எனக்கு தெரியாது. எனவே, நான் அவருக்கு டீ வழங்க வேண்டும் என்று நினைத்தேன். மறுநாள் நான் நாக்பூருக்குத் திரும்பி வந்தேன்.
அப்போது, அவர் என் பக்கத்தில் நின்றிருந்தார். நாங்கள் பேசவே இல்லை. நான் என் வேலையில் மும்முரமாக இருந்தேன். தேநீரை அவருக்கு பருகிய பிறகு, அவர் வாவ் டோலி என்று கூறினார். எதிர்காலத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தேநீர் வழங்க விரும்புகிறேன். என் வாழ்நாள் முழுவதும் புன்னகையுடன் அனைவருக்கும் தேநீர் விற்க விரும்புகிறேன்.
யார் இந்த டோலி?
இந்தியர்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் டோலி என்ற டீ மாஸ்டர். நாக்பூரின் சதர் பகுதியில் சாலையோரத்தில் ‘டோலி சாய்வாலா’ என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் அணிந்திருக்கும் உடையில் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கையில் டீ கிளாசை கொடுக்கும் வரை சுறுசுறுப்பாக இருப்பார். தனது நேர்த்தியான டீ போடும் விதத்தால் பிரபலமானார் டோலி என்பது குறிப்பிடத்தக்கது.