PM Modi - Bill Gates: மைக்ரோசாஃப்ட்  நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடனான சந்திப்பில்,  பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதித்தாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி - பில்கேட்ஸ் சந்திப்பு:


மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். அப்போது, செயற்கை நுண்ணறிவு, பெண்கள் தலைமையிலான மேம்பாடு, விவசாயத்தில் புதுமை, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றியமைத்தல் மற்றும் இந்தியாவிலிருந்து உலகிற்கு பாடங்களை எடுத்துச் செல்வது போன்றவற்றை பிரதமர் மோடியிடம் பேசியதாக பில்கேட்ஸ் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பான டிவிட்டர் பதிவில், “நரேந்திரமோடியை சந்திப்பது எப்போதுமே உத்வேகம் அளிக்கிறது, மேலும் விவாதிக்க நிறைய இருந்தது” என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.






மோடி பெருமிதம்:


பில் கேட்ஸின் டிவீட்டை ரிடிவீட் செய்த பிரதமர் மோடி, “எங்கள் கிரகத்தை மேம்படுத்தும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகளைப் பற்றி விவாதிப்பதில் எப்போதும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும், பில்கேட்ஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.









பில்கேட்ஸின் இந்திய பயணம்:


முன்னதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். அந்த மாநில அரசு அதிகாரிகளுடன் புவனேஸ்வரில் உள்ள ஒரு குடிசைப்பகுதிக்கு சென்று அங்கு வசிப்பவர்களின் நலம் குறித்து கேட்டறிந்தார். பரோபகாரர் மாநிலத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களின் உறுப்பினர்களுடனும் உரையாடினார். மத்திய அமைச்சர்கள் ஹர்திப் சிங் பூரி மற்றும் மண்சுக் மாண்டவியா தலைமையிலான குழுக்களை தனித்தனியாக சந்தித்து துறை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேட்டறிந்தார். . குஜராத்தில் உள்ள ஜமாநகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளிலும் கேட்ஸ் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.