தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு டயலாக வரும் என்னோட மொபட் வச்சிட்டு எந்த ட்ராஃபிக்கிலும் பூந்து பூந்து போயிடுவேன். என்னோட மொபட் நின்னுபோயிட்டா மிதிச்சு மிதிச்சே வீடு வரைக்கும் வந்திடுவேன். ஆனா உன் காரை வச்சு இதெல்லாம் பண்ண முடியுமா என்பார். அதுபோல் நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மெர்சிடீஸ் பென்ஸ் சிஇஓ மார்டின் ஸ்க்வென்க் தான் இப்படி ஒரு நிகழ்வை சந்தித்துள்ளார். இதுபற்றி அவரே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் அவர், உங்கள் S கிளாஸ் பென்ஸ் கார் புனேவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வீர்கள். ஒரு சில கிலோமீட்டர் நடந்து செல்லுங்கள் பின்னர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவைப் பிடித்து இலக்கை சேருங்கள். இதுதான் எனக்கும் நடந்தது என்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்து நெட்டிசன்கள் குதூகலமடைந்தனர். பலரும் பலவித கருத்துகளைப் பதிவிட்டனர். போக்குவரத்து நெரிசலின் போது பொது போக்குவரத்து தான் மெகா ஹிட் என்று பதிவிட்டுள்ளனர்.
இன்னொருவர் இதைப் பார்க்கும் போது எனக்கு கஜினி படத்தில் தன் காதலியைக் காண அமீர் கான் ஆட்டோவில் செல்வதுதான் நினைவுக்கு வருகிறது என்று எழுதியுள்ளார்.