காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தீவிரத்தன்மை இல்லை என்றும் பொறுப்பு இல்லாமல் அதிகாரத்தை பெற விரும்புகிறார் என்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாக சாடியுள்ளார். அவர் அரசியலுக்கு தகுதியானவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளார்.


 






ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கட்சி திருந்தவில்லை என்றால் வடகிழக்கு முழுவதையும் காங்கிரஸ் இழக்க நேரிடும் என்று கட்சியின் தலைமையிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த சர்மா, 2015இல் பாஜகவில் இணைந்தார்.


ராகுல் காந்தி ஒரு சீரியஸான அரசியல்வாதி இல்லை என்றும், நிலப்பிரபுவாக நடந்து கொள்வதாகவும், திமிர்பிடித்தவர் என்றும் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.


விரிவாக பேசிய அவர், "அவர் அரசியலுக்கு தகுதியற்றவர் என்பது முதல் விஷயம். ஒருவேளை, அவர் செய்யக்கூடாத வேலையை அவர் செய்துகொண்டிருக்கலாம். ராகுல் காந்தி சில சமயங்களில் கூட்டத்திற்கு நடுவே ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளுக்கு சென்றுவிடுவார். திடீரென்று அடுத்த அறைக்குச் சென்று அரை மணி நேரம் கழித்து வருவார். அவரிடம் தீவிரத்தன்மை இல்லை.


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கும், அமேதியில் தோல்வியடைந்ததற்கும் தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஆனால், கட்சியின் முக்கிய முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.


மக்களவைத் தேர்தலில் அவரின் தலைமையில் கட்சி தோல்வியடைந்ததால் தலைவராக இருக்க மாட்டேன் என ராகுல் தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், இன்று கட்சியை நடத்துவது யார், இந்திய ஒற்றுமை பயணத்தை வழிநடத்துவது யார்? மொத்தக் கட்சியும் யார் பின்னால் ஓடுகிறது? அதாவது பொறுப்பு இல்லாமல் அதிகாரத்தை அனுபவிக்க விரும்புகிறீர்கள். 


நாடாளுமன்றத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாமல், கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமல், மக்களிடம் பொறுப்பு இல்லாமல் நடந்துவிட்டு அதிகாரத்தை அனுபவிக்க விரும்பினால், அது மிகவும் ஆபத்தான விஷயம்.


நீங்கள் காங்கிரஸ் தலைவர் இல்லை. ஆனால் நீங்கள் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் தலைவராக இல்லை என்றால், தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், இப்போது ஒட்டுமொத்தக் கட்சியும் உங்கள் பின்னால் இருப்பது ஏன்?


அவர்கள் (காந்தி குடும்பம்) ஏழை மக்களிடம் செல்கிறார்கள். ஆனால், ஏழைகள் அவர்கள் வீட்டிற்கு வருவார்களா? சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஒரே டைனிங் டேபிளில் ஏழை மக்களுடன் இரவு உணவு சாப்பிடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?" என்றார்.