இந்தியாவின் 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மேகாலயா. கடந்த 1970-ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட இந்த மாநிலத்திற்கு 1972ஆம் ஆண்டு, முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்தில் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை முக்கிய அரசியல் கட்சிகளாக உள்ளன.
2018-ஆம் ஆண்டு தேர்தல்:
கடந்த 2018-ஆம் ஆண்டு, மேகாலயாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், 60 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைத்தது.
இந்த சூழ்நிலையில், கூட்டணியாக ஆட்சி நடத்தி வந்த தேசிய மக்கள் கட்சி, பாஜக ஆகியவை தனித்து களம் கண்டது. அதுமட்டும் இன்றி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்தது.
மேகாலயாவில் இழுபறி:
ஒரு தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்த நிலையில், மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில் 59 இடங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 77.9% வாக்கு பதிவாகியிருந்தது.
மேகாலயாவில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் தேசிய மக்கள் கட்சி தீவிரம் காட்டியது. அதேபோல் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் கட்டியது.
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்த படியாக, ஐக்கிய ஜனநாயக கட்சி 10 தொகுதிகளில் முன்னிலை விகித்து வருகிறது.
காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டிய மம்தா:
இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ், பாஜகவை காட்டிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் சிறப்பான முடிவுகளை பெற்றுள்ளது. பாஜக மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில், மற்ற கட்சிகளின் உதவியை நாடியுள்ள தேசிய மக்கள் கட்சி. தேசிய மக்கள் கட்சி, பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 3,419 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. மேகாலயாவில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.