உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இருப்பது இந்தியா. இங்கு, ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது.


மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.


தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம்:


கடந்த 1950ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணைம் அமைக்கப்பட்டதில் இருந்து 1989ஆம் ஆண்டு வரை, இது ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாகவே இருந்தது. ஆனால், 1989ஆம் ஆண்டுக்கு பிறகு, மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது.


இருப்பினும், நடுவில் மீண்டும் ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது வரை, தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பிரதமரின் பரிந்துரையில் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை, நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.


உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு:


இந்த வழக்கில் இன்று வரலாற்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், "பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்" என தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது, "தேர்தல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நியாயமானதாக இருக்க வேண்டும். அதன் தூய்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஜனநாயகத்தில், தேர்தலின் தூய்மை பேணப்பட வேண்டும். இல்லையெனில் அது பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளது. 


தீர்ப்பின் அம்சங்கள்:


தற்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி, தேர்தல் ஆணையத்திற்கு ஒரு சுதந்திரமான செயலகம் வழங்கப்படும். விதிகளை உருவாக்கும் அதிகாரங்கள் வழங்கப்படும். சுயாதீனமான பட்ஜெட் உருவாக்கப்படும். தேர்தல் ஆணையர்களை பதவி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு வழங்கப்படும்.


பிரதமர் அலுவலகம், மத்திய சட்ட அமைச்சகத்திடம் சென்று நிதி பெறுவதற்கு பதிலாக, தேர்தல் ஆணையம் இப்போது இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நேரடியாக நிதியைப் பெறலாம்.