நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த பெண் ஒருவர் தற்போது அதே வங்கியின் ஒரு கிளையில் உதவி பொது மேலாளராக பணியில் அமர்ந்துள்ளார்.


20 வயதில் தனது கணவரை இழந்த பிரதிக்‌ஷா டோண்ட்வாக்கர் என்ற அந்தப் பெண் எஸ்பிஐ மும்பை கிளையில் துப்புரவு பணியாளராக சேர்ந்தார். அப்போது அவர் பள்ளிப் படிப்பை கூட முடித்திருக்கவில்லை. ஆனாலும் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக கல்வி கற்றார். கடுமையாக உழைத்தார். இன்று உயர் பதவியில் அமர்ந்துள்ளார்.


பிரதிக்‌ஷாவின் கதை முக்கியத்துவம் வாய்ந்தது. நம் நாட்டில் பெண்கள் சாதிக்க நிறைய சமுதாய கட்டுகளை உடைக்க வேண்டியிருக்கிறது. அத்தனையையும் தகர்த்தெறிந்து வெற்றி கண்டவர் தான் நம் பிரதிக்‌ஷா.


இளமைக் காலம்:


பிரதிக்‌ஷா டோண்ட்வாக்கர் 1964 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்தார். அவரது பெற்றோர் ஏழைகள். அவர்கள் பிரதிக்‌ஷாவின் 16வது வயதில் அவரை சதாசிவ கடுவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது பிரதிக்‌ஷா 10ஆம் வகுப்பைக் கூட முடிக்கவில்லை.


சதாசிவ் கடு, மும்பயில் புக் பைண்டராக எஸ்பிஐ வங்கியில் பணி புரிந்து வந்தார். திருமணமான ஒரே ஆண்டில் பிரதிக்‌ஷாவுக்கு விநாயக் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 4 வயதான போது குழந்தையை எடுத்துக் கொண்டு கிராமத்திற்கு குலதெய்வ வழிபாட்டிற்காக கடுவும், பிரதிக்‌ஷாவும் சென்றனர். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் சதாசிவ கடு இறந்தார். பிரதிக்‌ஷா வாழ்க்கையே இருண்டு போனதாக உணர்ந்தார். அப்போது அவருக்கு வயது 20.
கணவரின் மறைவை அடுத்து அவர் பணி புரிந்த வங்கிக்கு சென்ற பிரதிக்‌ஷா அவரது சம்பள பாக்கியைப் பெற்றார். அப்போது அங்கிருந்தவர்களிடம் வேலை கேட்டுள்ளார். அவருடைய கல்வித் தகுதிக்கு மாதம் ரூ.60 சம்பளத்தில் துப்புரவுத் தொழிலாளி பணி கிடைத்துள்ளது. ஆனால் வங்கிக்கு வரும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் பார்த்த அவருக்கு தானும் அதுபோன்றதொரு பணியில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். 


வங்கி ஊழியர்களின் உதவியுடன் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து அதை முடித்தார். 60 சதவீத மதிப்பெண்களுடன் பரீட்சையில் வெற்றி பெற்றார். பின்னர் 12 ஆம் வகுப்பு படிக்க திட்டமிட்டார். வறுமை அவரது கனவுக்கு தடை போடவில்லை. விக்ரோலியில் உள்ள நைட் ஸ்கூலில் சேர்ந்து 12ஆம் வகுப்பு படித்தார். 1995ல் சைக்காலஜி பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். அப்போது தான் அவருக்கு வங்கியில் கிளார்க் வேலை கிடைத்தது.


மறுமணம்:


1993ல் பிரதிக்‌ஷா மறுமணம் செய்து கொண்டார். பிரமோத் டோண்ட்வாக்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் வங்கியில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து வங்கித் தேர்வுகளுக்காக படித்தார். இதற்கிடையில் 2 குழந்தைகளுக்கு தாயானார். தொடர்ந்து வங்கித் தேர்வுகளை எழுதி படிப்படியாக முன்னேறினார். 2004ல் பிரதிக்‌ஷா பயிற்சி அதிகாரி ஆனார். கடந்த ஜூன் மாதம் உதவி பொது மேலாளர் ஆனார். அவருடைய பணிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. ஓய்வுக்குப் பின் தன்னைப் போன்று வங்கித் தேர்வு எழுத விரும்புவோருக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.