குரங்கம்மையை கட்டுப்படுத்தும் விதமாக கண்காணிப்பு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என உறுப்பு நாடுகளை உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய கண்டத்தின் பிராந்திய இயக்குநர் கேட்டு கொண்டுள்ளார்.


உலகளவில் கவலை அளிக்கும் விதமான பொது சுகாதார அவசர நிலையாக குரங்கம்மை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய கண்டத்தின் பிராந்திய இயக்குநரும் மருத்துவருமான பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், "இதுவரை பரவாத பல நாடுகளிலும் குரங்கம்மை வேகமாக பரவி வருவது மிகவும் கவலையளிக்கிறது. இருப்பினும், ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களிடையே இந்த நோய் அதிகமாக பரவுகிறது. பாதிக்கப்படகூடிய மக்களிடையே கவனம் செலுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டால் இதை கட்டுப்படுத்துவது சாத்தியமே" என்றார்.


உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளை பொறுத்தவரை இந்தியாவில் மூன்று பேரும் தாய்லாந்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்குதான் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவருக்கு குரங்கம்மை- பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பூனம் கேத்ரபால் சிங், "முக்கியமாக, கவனம் செலுத்தும் முயற்சிகள் நடவடிக்கைகள் யாவும், மக்களை ஒதுக்கி வைக்காத வகையிலும் பாகுபாடு இன்றியும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.


உலகளவிலும் இந்த பிராந்தியத்திலும் குரங்கம்மை ஆபத்து மிதமானதாக இருந்தாலும், சர்வதேச அளவில் இந்த நோய் பரவுவதற்கான சாத்தியம் உண்மைதான். மேலும், வைரஸ் பற்றி தெரியாதவர்கள் பலர் உள்ளனர். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் குரங்கம்மையை தடுக்க தீவிரமான பதில் நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்" என்றார்.


பல நாடுகளில் குரங்கம்மை பரவியதையடுத்து, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. இதற்கு அடுத்த நாளே, சனிக்கிழமையன்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலகளவில் கவலை அளிக்கும் விதமான பொது சுகாதார அவசர நிலையாக குரங்கம்மையை அறிவித்தார். 


குரங்கம்மை வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மறைமுகமாகவும் நேரடி தொடர்பின் மூலமாகவும் மனிதர்களுக்கு பரவுகிறது. தொற்று பரவிய இடத்தை தொடுவதன் மூலமாகவும் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலமாகவும் பாலியல் உறவு கொள்வதாலும் பாதிப்பு ஏற்பட்ட நபரின் சுவாசத் துளிகள் நம் மீது படுவதன் மூலமாகவும் மனிதனிலிருந்து மனிதனுக்குப் குரங்கம்மை பரவுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண