மத்தியப் பிரதேசத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு அம்பேத்கர், விவேகானந்தர், ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெக்டேவர் மற்றும் பாரதிய ஜன சங்கத் தலைவர் தீனத்யாள் உபாத்யாய ஆகியோர் பற்றி கற்பிக்கப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சரங் தெரிவித்துள்ளார்


முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியப் பிரதேச மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அம்பேத்கர், விவேகானந்தர், ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெக்டேவர் மற்றும் பாரதிய ஜன சங்கத் தலைவர் தீனத்யாள் உபாத்யாய ஆகியோர் பற்றி கற்பிக்கப்படும். இவர்களைப் போன்ற பெருந்த் தலைவர்களைப் பற்றி கற்பிப்பதின் மூலம் மாணவர்களுக்கு நல்லொழுக்கம், நன்னெறி, சமூக, மருத்துவ பண்பாடு ஆகியன கொண்டு சேர்க்கப்படும் என்று கூறினார்.


அதேபோல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆயுர்வாத வித்தகரான மகரிஷி சரகா பற்றியும் சுஷ்ருத் முனிவர் பற்றியும் கற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.


இந்துத்துவ தலைவர்களும் சமூக நீதிக் காவலரும்:


இது குறித்துகல்வி அமைச்சர் விஸ்வாஸ் சரங் மேலும் கூறுகையில், "கேசவ் பலிராம் ஹெக்டேவர் 1925-ஆம் ஆண்டு நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவினார். தீனதயாள் உபாத்யாய பாரதி ஜன சங்கத்தின் முன்னோடித் தலைவர். அவர் அந்தோத்யா திட்டத்தை செயல்படுத்தினார். சுவாமி விவேகனாந்தா கடல் கடந்தும் இந்தியக் கலாச்சாரத்தை கொண்டு சேர்த்தார். ஒடுக்குமுறைகளை வீழ்த்து இந்திய அரசியல் சாசனத்தைப் படைத்து சமூக நீதியின் காவலராக உயர்ந்தார் அம்பேத்கர்.


இவர்கள் நால்வருமே அடிப்படையில் மாமனிதர்கள், தீர்க்கதரிசிகள். அவர்களின் வாழ்க்கை நன்னெறிகளால் கட்டமைக்கப்பட்டது. அவர்களின் எண்ணங்கள் உயர்ந்தவை, நடத்தை மற்றவர்களுக்கு ஊக்கசக்தி. அவர்கள் அனைவரும் குறிப்பாக மாணாக்கர் பின்பற்றத்தக்க மனிதர்கள். 


ஆகையால் தான் அவர்களைப் பற்றி பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வியில் தலைவர்கள் பற்றி எத்தகைய பாடத்திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை பாடதிட்டக் குழு முடிவு செய்துவிட்டது. தேசிய மருத்துவக் கவுன்சிலும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது" என்றார்.


மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு ஃப்வுண்டேஷன் கோர்ஸ் அதாவது அடிப்படைப் பயிற்சி வகுப்பு என்பது கல்லூரி ஆரம்பித்த நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்கு நடைபெறும். இந்த ஒரு மாத காலத்தில் அம்பேத்கர், ஹெக்டேவர், விவேகானந்தர், தீனதயாள் போன்றோரின் வாழ்க்கை நெறிகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் அரசின் முயற்சிக்குப் பரவலாகப் பாராட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் 2000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன" என்று அறிவித்துள்ளார்