தேச விரோத சக்திக்கு துணைபோகிறார்கிறார்கள் என்னும் விமர்சனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சார்பு இதழான பஞ்சஜன்யாவில் இப்படி ஒரு விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில், இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனம் இடதுசாரிகள், நக்சலைட்டுகள், இன்னும் சிறு சிறு குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தேசவிரோத போக்கைக் கடைபிடிக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனம் வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்திருக்கலாம் என்றெல்லாம் குற்றஞ்சாட்டியுள்ளது. இன்போசிஸ் புதிய வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்நிலையில், இந்த சிக்கல்களை சுட்டிக்காட்டி பஞ்சஜன்யா இதழில் வெளியான கட்டுரையில் தான் மேற்கூறிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற மோசமான ஒரு சேவையை வழங்குமா? என்றும் அந்தக் கட்டுரையில் காத்திரமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக்கை அழைத்து, போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் செய்துவிடும்படி அவகாசம் அளித்திருந்தார். இந்தப் பின்னணியில்தான் பாஞ்சஜன்யா இதழில் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலகி நிற்கும் ஆர்எஸ்எஸ்..
பஞ்சஜன்யா கட்டுரையை முன்வைத்து ஆர்எஸ்எஸ், ஆர்.எஸ்.எஸ், பாஜக மீது விமர்சனங்கள் எழுந்துவர, ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் கூறுகையில், "இந்திய நிறுவனமான இன்ஃபோசிஸ் நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்துள்ளது. இன்ஃபோசிஸ் உருவாக்கிய இ போர்டலில் சில சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், அதன் நிமித்தமாக பாஞ்சஜன்யா இதழில் வெளியான கட்டுரை அதை எழுதிய தனிநபரின் கருத்தே தவிர ஆர்எஸ்எஸ்ஸின் கருத்து இல்லை. மேலும் பஞ்சஜன்யா ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழும் அல்ல. ஆகையால் அதில் வெளியாகும் கட்டுரைகளை ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்புபடுத்தக் கூடாது" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் முன்னாள் ஊழியரின் கோபம்:
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎஃப்ஓ ஆன மோகன்தாஸ் பய் இது குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இபோர்டலில் சிக்கல் உள்ளதால் இன்ஃபோசிஸ் விமர்சனங்களுக்குத் தகுதியானது. தவறுகளைக் களைய இன்ஃபோசிஸ் வேலை செய்துவருகிறது. ஆனால், அதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தேசவிரோத நிறுவனம் என்று விமர்சிப்பதும் சதித்திட்டங்களுடன் தொடர்புப்படுத்திப் பேசுவதும் மோசமான மனநிலையின் பிரதிபலிப்பு. அரசியலில் இப்படியான குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏற்புடையது. ஏனெனில் அரசியல்வாதிகள் ஒருவொருக்கொருவர் விமர்சித்துக் கொள்வதும் இயக்பே. ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களை இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது சரியானது அல்ல என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.