ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர் மற்றும் எழுத்தர் ஆகியோர் 9ஆம் வகுப்பு நடைமுறைத் தேர்வில் மதிப்பெண் குறைவாகக் கொடுத்ததாகக் கூறி மாணவர்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.






இச்சம்பவம் மாவட்டத்தின் கோபிகந்தர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு நடத்தும் பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமையன்று ஜார்கண்ட் கல்விக் கவுன்சில் (ஜேஏசி) வெளியிட்ட முடிவுகளில் 9 ஆம் வகுப்பு தேர்வில், 32 பேரில் 11 மாணவர்கள் தோல்விக்கு சமமாகக் கருதப்படும் 'டிடி' (டபுள் டி) கிரேடு பெற்றுள்ளனர்.


"சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கொடுக்காததால், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகு, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், மாணவர்களின் வாழ்க்கை கெட்டு விடும் என்று கூறி பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது” என்று கோபிகாந்தர் காவல் நிலையப் பொறுப்பாளர் நித்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தாக்கப்பட்ட ஆசிரியர் சுமன் குமார் என்றும் எழுத்தராக சோனேராம் சௌரே என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் கொடுக்கவில்லை" என்றார்.


போக்தாவுடன் கோபிகாந்தர் தொகுதி மேம்பாட்டு அலுவலர் (BDO) ஆனந்த் ஜா விசாரணைக்காக பள்ளிக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "குடியிருப்புப் பள்ளியில் 200 மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர் முன்பு பள்ளியின் தலைமையாசிரியராக பதவி வகித்துள்ளார்.


ஆனால், பின்னர் தெரியாத காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டார். ஆசிரியர்கள் இடையேயான போட்டியின் காரணமாக அவர் நீக்கப்பட்டிருக்கலாம். பள்ளியின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, 9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான வகுப்புகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்" என்றார்.


நடைமுறைத் தேர்வில் ஆசிரியர் குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அதனால் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஜார்கண்ட் கல்வி கவுன்சிலின் தளத்தில் மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றியவர் எழுத்தர் என்பதால் அவரும் தாக்கப்பட்டுள்ளார்.