மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், அதிக பயணிகள் பயன்படுத்தும் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக நான்கு கோடிக்கும் அதிகமான பயணிகள், அந்த விமான நிலையம் வாயிலாக பயணம் மேற்கொள்கின்றனர். இந்த விமான நிலையத்தில் குறைந்த கட்டண உள்நாட்டு விமானங்களுக்கான T1 மற்றும் சர்வதேச மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான T2 எனும் இரண்டு முனையங்கள் உள்ளன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் காண்பிக்கும் 5000க்கும் மேற்பட்ட, பொருட்களை கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் T2 முனையத்தில் உள்ளது. முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், அனைத்து சேவைகளும் இணையத்தின் வழியாகவே தாமதமின்றி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தில் திடீரென சர்வர்கள் முடங்கின. இதனால் பயனிகளுக்கான செக்- இன் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விஸ்தாரா, ஆகாஷா ஏர் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் விமான சேவைகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் என கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது பயணிகள் தவிக்க, நேரம் செல்ல செல்ல விமான நிலையத்தில் கூட்டமும் அதிகரித்தது.
அதைதொடர்ந்து, மேனுவல் முறையில் செக்- இன் பணிகள் தொடங்கப்பட்டதோடு, நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் காரணாமாக சர்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பயணிகளின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தால் வெளிநாடுகளில் இருந்து வந்து இறங்கிய பயணிகள், தங்களது உடைமைகளுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியாதாயிற்று. மேனுவல் முறையில் செக் - இன் நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்கு தாமதமானதால், சில சர்வதேச விமானங்கள் சரியான நேரத்திற்கு புறப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து 2 மணி நேர முயற்சிகளுக்கு பிறகு, மும்பை விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியது. பைபர் கேபிளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே, விமான நிலைய சர்வர் முடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.