லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய மசூதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள வீடியோவில், கார்கில் திராஸில் உள்ள ஜாமியா மசூதி கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிவது பதிவாகியுள்ளது.


 






சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


கார்கில் பகுதிக்கு அருகே உள்ள இந்த மசூதியில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. மசூதி தீப்பிடிப்பதற்கு முன்பு மக்கள் அங்கு பிரார்த்தனையில் ஈட்டுபட்டிருந்தனர்.


தீயை அணைக்க உள்ளூர் நிர்வாகம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை.


இதுகுறித்து கார்கில் தலைமை நிர்வாக கவுன்சிலர் பெரோஸ் அகமது கான், "காவல்துறை, ராகடசுணுவம் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கார்கில் மாவட்ட நிர்வாகம் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பியது. 


 






ஆரம்பத்தில், ராணுவத்தினர் தங்கள் ஆட்களையும் இயந்திரங்களையும் திரட்டி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஜாமியா மசூதியின் மேல் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன" என்றார்.


கடந்த 2019ஆம் ஆண்டுதான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் தனி யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. பயங்கரவாதத்தால் கடும் பாதிப்படைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், சமீப காலமாக திரையரங்குகள், கால்பந்து மைதானங்கள் ஆகியவை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.