டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 6 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலும் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் தீ விபத்தை தொடர்ந்து 12 குழந்தைகள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். அதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறுகையில், நள்ளிரவு 11.32 மணியளவில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து 16 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் மருத்துவமனை மற்றும் அதன் அருகில் இருந்த குடியிருப்பு கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தீ விபத்தில் காயத்துடன் உயிருக்கு போராடி வரும் பச்சிளம் குழந்தைகள் கிழக்கு டெல்லியில் உள்ள அட்வான்ஸ் என்.ஐ.சி.யூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.