ராணுவத்தில் பணியாற்றியவர்களின் பிள்ளைகளுக்கு நாடு முழுவதும் கல்வி மற்றும் மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பில் இடஒதுக்கீழு மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த பிரியங்கா பட்டீல் என்பவர், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள உதவிப்பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அதில், முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்பதன் அடிப்படையில் பலன் அடைவதற்காக, அதற்கான அடையாள அட்டையை வழங்குமாறு, ராணுவ வீரர்கள் நல வாரியத்தை அணுகியுள்ளார்.


அடையாள அட்டை வழங்க மறுப்பு:


ஆனால், 31 வயதான பிரியங்கா பட்டீலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதால் தந்தையை சார்ந்தவர் என்பதற்கான அடையாள அட்டையை வழங்க, ராணுவ வீரர்கள் நல வாரியம் மறுத்துள்ளது. இதையடுத்து, பிரியங்கா நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவில், "சுபேதரராக பணியாற்றிய ரமேஷ் கந்தப்பா போலீஸ் பாட்டில் எனும் தனது தந்தை, கடந்த 2001ம் ஆண்டு ஆப்ரேஷன் பராக்ரம் எனும் திட்டத்தின் அடிப்படையில் கன்னி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது பலியானார். அப்போது தனக்கு வெறும் 15 வயது தான், அதை தொடர்ந்து சிரமப்பட்டு படித்து கடந்த 2015ல் பட்டபடிப்பை முடித்தேன். தற்போது மாநில அரசு அறிவித்துள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு அனைத்து தகுதிகள் இருப்பினும், திருமணமாகிவிட்டதால் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்பதற்கான அடையாள அட்டை வழங்க மறுக்கப்படுகிறது" என தெரிவித்து இருந்தார்.


வழக்கு விசாரணை:


இந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு மகன் எப்படி திருமணமானாலும் தனது தந்தைக்கு மகனாகவே இருக்கிறாரோ, அதேபோன்று தான் திருமணமானாலும் ஒரு பெண் தனது தந்தைக்கு மகளாகவே இருக்க வேண்டும். மகனை போன்றே மகளுக்கும்  திருமணம் என்பது அவரது நிலையை மாற்றாது.


வழிகாட்டுதல் விதிமுறை ரத்து:


எனவே, 25 வயதுக்குட்பட்ட திருமணமான மகள்கள், சார்பு அடையாள அட்டையை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக வலியுறுத்தும்,  ராணுவ வீரர்களின் நலன் மற்றும் மீள்குடியேற்றத் துறையின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து, மற்ற அனைத்து தரவுகளும்  திருப்திகரமாக இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர் பிரியங்கா பாட்டிலுக்கு உரிய சார்பு அடையாள அட்டையை வழங்குமாறும் உத்தரவிட்டார்.


பெண்களின் வளர்ச்சிக்கு தடை:


பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த ஒரே மாதிரியான பாலின சித்தரிப்பை தற்போதும் அவ்வாறே இருக்க அனுமதித்தால், பெண்களின் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் அது காலவரையற்ற தடையாக இருக்கும் என்றும் நீதிமன்றம் கருதுகிறது.


”முன்னாள் ராணுவ வீரர்கள்” வேண்டாம்:


எனவே, படைகளில் பாலின சமன்பாடுகள் மாறி வருவதால், முன்னாள் ராணுவ வீரர்களை முன்னாள் ராணுவ வீரர்கள் என ஆண் பாலினத்தை மட்டும் குறிக்கும் வகையில் அழைப்பதை நிறுத்தவும், பாலின-நடுநிலை பெயரிடலுடன் முன்னாள் ராணுவ வீரர்களின் அடையாளப்படுத்துவதற்கான பெயரை  பரிசீலிக்குமாறும் மத்திய அரசை கர்நாடக உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.