மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 18+ படத்தை பார்த்துவிட்டு, சிறுமியின் மைனர் அண்ணனே (13), பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்: கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, இந்த சம்பவம் நடந்தது. சிறுமியின் தாயாரும், சிறுமியின் இரண்டு மூத்த சகோதரிகளும் சேர்ந்து இந்த சம்பவத்தை மூடி மறைத்தது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் சிங் கூறுகையில், "கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, ஜாவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்.


அதன் பிறகு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சம்பவத்தின் போது, அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது வீட்டின் முற்றத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு, 13 வயது சிறுவன், அவரது தாய் மற்றும் இரண்டு மூத்த சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.


மூடி மறைத்த ஒட்டுமொத்த குடும்பம்: அப்போது, கொலையை மறைக்க உதவியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்ட சிறுமியின் அருகில்தான் குற்றம்சாட்டப்பட்ட அண்ணன் படுத்திருக்கிறார். தனது மொபைல் போனில் 18+ படத்தை பார்த்துவிட்டு தங்கையை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளார்.


தந்தையிடம் புகார் செய்வதாக மிரட்டியபோது அந்த சிறுவன், தன்னுடைய தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், தனது தாயை எழுப்பி நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார் அந்த சிறுவன். தாய் வந்து பார்த்தபோது, அவரது மகள் உயிருடன் இருந்திருக்கிறார்.


அதை கண்டதும், அந்த சிறுவன் தன்னுடைய தங்கையின் கழுத்தை மீண்டும் நெரித்தார். அதற்குள் அவர்களது இரண்டு சகோதரிகளும் கண்விழித்துள்ளனர். விசாரணையை தவறாக வழிநடத்த படுத்த இடங்களை அவர்கள் மாற்றிக்கொண்டனர்.


மேலும், சிறுமியை விஷ பூச்சி கடித்ததாக கூறினர். அவர்கள் அவரது உடலை தனியார் மருத்துவரிடம் கூட கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அவரது உடலை அரசு மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்கு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


ஆதாரங்களை சேகரித்து, 50 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார், குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தில் குளறுபடிகள் இருப்பதை கண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்" என்றார்.