இந்திய ராணுவத்தின் அடுத்த புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவானே இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அவருடைய ஓய்விற்கு பிறகு மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் இந்திய ராணுவத்தில் மனோஜ் பாண்டே கடந்து வந்த பாதை என்ன? என்பதை பார்க்கலாம்.
மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்று 1982ஆம் ஆண்டு ராணுவத்தின் பொறியியல் பிரிவில் இணைந்தார். இவர் கேம்பர்லியிலுள்ள ஸ்டாஃப் கல்லூரியில் படித்துள்ளார். அதன்பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் ஹை காமாடெண்ட் பயிற்சியில் சேர்ந்தார். ராணுவத்தின் பொறியியல் பிரிவில் இணைந்த பிறகு இவர் பல்வேறு முக்கியமான பதவிகளை வகித்து வந்தார்.
குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெற்ற முக்கியமான ராணுவ தாக்குதல்களில் இவர் தலைமை வகித்துள்ளார். ஆப்ரேஷன் பாராகாரம் என்ற ராணுவ தாக்குதலில் இவர் 117 இங்கிலீஷ் ரெஜிமெண்ட் படைக்கு தலைமை தாங்கினார். அதன்பின்னர் வடக்கு ரெஜிமெண்ட் ஸ்டிரைக் கார்ப்ஸ் படையின் பொறியியல் பிரிவையும் இவர் தலைமை வகித்துள்ளார்.
இவை தவிர ஐநாவின் எத்தியோபியா மற்றும் எரிட்ரியா நாடுகளுக்கு சென்ற ராணுவ மிஷன்களில் இவர் இடம்பெற்று இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தமான் தீவுகளில் இருந்த படைகளின் தலைமை தளபதியாக இருந்தார். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இவர் கிழக்கு படைகளின் தளபதியாக இருந்தார். அதன்பின்னர் பிப்ரவரி மாதம் ராணுவ படைகளின் துணை தளபதியாக பதவி வகித்து வந்தார்.
இவருடைய ராணுவ சேவையை பாராட்டி பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அடி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இந்தச் சூழலில் 39 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிப்புரிந்து வரும் மனோஜ் பாண்டே ராணுவத்தின் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொறியியல் பிரிவிலிருந்து வந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பதவியேற்க போகும் முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்