மத்திய பிரதேசத்தில் ரைய்சன் மாவட்டத்தில் கமரியா கிராமத்தில் திருமண ஊர்வலம் சென்ற வண்டி அப்பகுதியில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
முதல் தகவல்களின்படி, மத்திய பிரதேசம் ரைசனில் இருக்கும் கிராமத்தில் திருமண ஊர்வலம் சென்றது. அப்போது போபால்-ஜபல்பூர் சாலையில் கமாரியா காட் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை-45 இல் லாரி ஒன்று வந்துள்ளது. லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி திசை மாறி சென்றுள்ளது. இதில் திருமண் ஊர்வலம் சென்ற வாகனம் மீது லாரி மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து கமாரியா கிராமத்திற்கு அருகே இரவு 10 மணியளவில் ஏற்பட்டதாக ரைசென் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் துபே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சுல்தான்பூர் காவல் அதிகாரி ராஜத் சராதே, “ விபத்தில் திருமண ஊர்வலத்திற்கு சென்றுக்கொண்டிருந்த பலரும் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.