பஞ்சாப் மாநில முதல்வரின் பதவியேற்பு விழா நிகழ்வுகள் மிகத் துரிதமாக நிகழ்ந்தேறி வருகின்றன. நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதை அடுத்து அந்தக் கட்சியின் பகவந்த் மான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஏழு வருடங்களுக்கு முன்பு தனது மகனைப் பிரிந்த குடும்பம் ஒன்று இந்த விழா ஏற்பாடுகளால் மீண்டும் தனது மகனுடன் ஒன்று சேர்ந்துள்ளது.


பஞ்சாப்பின் ஃபரீத்கொட் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்விந்தர் சிங் . 26 வயதான இவர் ஏழு வருடங்களுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் கட்கரில் நடந்து வரும் பதவியேற்பு விழா மேடை அலங்காரப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் காவல்துறை பாதுகாப்பு காரணங்களுக்காக அடையாளப் பரிசோதனை செய்ததன் காரணமாக தற்போது தனது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கபப்ட்டுள்ளார். 


இதுகுறித்துக் கூறும் ஜஸ்விந்தரின் தந்தை,’என் மகன் 10ம் வகுப்பு படித்துள்ளான். ராணுவத்தில் சேர்வதற்காகத் தயாராகி வந்த நிலையில் அதில் தேர்ச்சி அடையவில்லை என்பதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.நாங்களும் காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் கிடைக்கவில்லை. தற்செயலாக எங்கள் வீட்டுக்கு போலீஸ் ஜஸ்விந்தர் பற்றிய விவரம் கேட்டு அண்மையில் வந்தார்கள். நாங்களும் முதலமைச்சர் பதவியேற்புக்கான விழா இடத்துக்குச் சென்றோம். முதலில் என் மகனை அடையாளம் தெரியவில்லை. பின்னர் கண்டுகொண்டேன்.’ எனக் கூறியுள்ளார்.


பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடந்தது. இன்று நடைபெற்று வரும் வாக்குப் பதிவில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உள்ளது.


முன்னதாக 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆம் ஆத்மி அறிவிக்காத நிலையில், தேர்தலில் இறங்கு முகத்தைச் சந்தித்தது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து முதல்முறையாகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டார் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால். அந்த முடிவுகளின் அடிப்படையில் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் பகவந்த் மானுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி 18ஆம் தேதியே பகவந்த் மான்(Bhagwant Singh Mann) முதல்வர் வேட்பாளர் என்று கேஜ்ரிவால் அறிவித்தார். அப்போதே அவர் யார் என்று தேசிய அளவில் கேள்வி எழுந்தது.பஞ்சாப் கிராமமொன்றில் பிறந்த பகவந்த் மான், காமெடி நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். 48 வயதாகும் இவர், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சடோஜ் கிராமத்தில் ஜாட் சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும்போது காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் காமெடி நடிப்புக்காக, தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.