Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மன்மோகன் சிங் காலமானார்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92.
1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில் பிறந்த அவர், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். நாட்டின் இந்து அல்லாத முதல் பிரதமர் என்பதோடு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக முக்கிய பங்காற்றியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்:
குடியரசு தலைவர் இரங்கல்:
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்கள் கல்வி மற்றும் நிர்வாக உலகங்களை சமமாக எளிதாக்கிய அரிய அரசியல்வாதிகளில் ஒருவர். பொது அலுவலகங்களில் அவரது பல்வேறு பாத்திரங்களில், இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார். தேசத்துக்காக அவர் ஆற்றிய சேவை, களங்கமற்ற அரசியல் வாழ்வு, மிகுந்த பணிவு ஆகியவற்றிற்காக அவர் என்றும் நினைவுகூறப்படுவார். அவரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். பாரதத்தின் தலைசிறந்த மகன்களில் ஒருவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்:
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. தாழ்மையான தோற்றத்தில் இருந்து உயர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவர் செய்த பங்களிப்பு புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்” என பாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி வேதனை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மன்மோகன் சிங் ஜி இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. திருமதி கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் ஒரு வழிகாட்டி மற்றும் ஆலோசகரை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள விரிவான டிவிட்டர் பதிவில், “பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று கட்சிகளை தாண்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், மன்மோகன் சிங்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், மத்திய அரசு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, இந்தியாவில் ஒரு வார காலம் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.