ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. 


மணீஷ் சிசோடியாவின் சொத்து பறிமுதலா?


தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது. இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சிசோடியாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.


இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் சொத்து முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 52 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


முடக்கப்பட்ட சொத்துக்களில் அமந்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கௌதம் மல்ஹோத்ரா மற்றும் சிலரின் சொத்துகளும் அடங்கும். சிசோடியா மற்றும் அவரது மனைவி சீமா ஆகியோரின் இரண்டு சொத்துக்களும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த 11 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகிறது.


சிசோடியாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் அரோராவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்த நிலையில், இன்று சிசோடியாவின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது.


டெல்லி மதுபான கொள்கை வழக்கு:


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.


இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். 


துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.