Manipur Crisis: மணிப்பூரில் பிரைன் சிங்கின் ராஜினாமாவை தொடர்ந்து, புதிய முதலமைச்சராக யார் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா ஏன்?
மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் நிலவி வருகிறது. கட்டுக்கடங்காத வன்முறையால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான பொதுசொத்துகளும் சேதம் அடைந்துள்ளன. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. குறிப்பாக முதலமைச்சர் பிரைன் சிங்கே ஒரு சார்பாக செயல்படுவதாகவும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அவ்வபோது அவரது செல்ஃபோன் உரையாடல்களும் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் தான், கடந்த 2017ம் ஆண்டு முதல் மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பிரைன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாஜகவின் ராஜதந்திரம்:
பாஜக எம்எல்ஏக்கள் மத்தியிலேயே பிரைன் சிங் ஆதரவை இழந்து வருவதாகவும், அவர்களில் பலர் டெல்லியில் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர் பதவியில் நீடிப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான். மாநில சட்டமன்றத்தில் முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. திங்கட்கிழமை அவை கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், பாஜக எம்.எல்.ஏக்களே பிரைன் சிங்கிற்கு எதிராக வாக்களிக்கும் சூழல் நிலவியதாக தெரிகிறது. இதனால் ஏற்படும் அவமானத்தை தவிர்க்கவே, பாஜக அவசர அவசரமாக பிரைன் சிங்கை ராஜினாமா செய்ய வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனிடையே, பிரைன் சிங்கின் ராஜினாமாவை தொடர்ந்து, இன்று கூட திட்டமிடப்பட்டு இருந்த சட்டமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி?
வன்முறை மற்றும் மோதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்படலாம். இருப்பினும், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் பரவுகின்றன. அடுத்த முதலமைச்சரின் பெயரை இறுதி செய்வதற்காக, கட்சி உயர் தலைவர்களுடன் கூட்டங்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரைன் சிங்கின் ராஜினாமா, மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய சமூகங்களுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஊக்குவிக்கும் என்று பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன. மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுக்க உள்ள முடிவு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
ஒருபுறம் குடியரசு தலைவர் ஆட்சி அமலாகலாம் என கூறப்பட்டாலும், மறுபுறம் அடுத்த முதலமைச்சர் பதவிக்காக மாநிலத்தில் கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. மாநிலத்தில் இரு சமூகங்களுக்கு இடையேயா பிரச்னை, காவல்துறை மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அடுத்த முதலமைச்சராக நியமிக்கப்படுபவர் அனைத்து தரப்பினரையும் இணைத்து தீர்வை நோக்கி நகர்பவராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
அதன்படி, முன்னாள் சபாநாயகர் யும்னம் கேம்சந்த் சிங் முதல் நபராக கருதப்படுகிறார். பிரைனின் சூழ்நிலையை கையாளும் விதத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் என்பதன் மூலம் பொதுமக்களிடையே அறியப்படுகிறார். ஆனால் தற்போது எதுவும் அதிகாரப்பூர்வமாக இல்லை.
இருப்பினும், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கேம்சந்த், கடந்த திங்கட்கிழமை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவருக்கு முன், அதிருப்தியாளர்களில் ஒருவரான சட்டசபை சபாநாயகர் சத்யபிரதா சிங்கும் டெல்லிக்கு அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.