Manipur Firing: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், இன்னர் மணிப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு:
மொய்ராங் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
காலை 9 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் ஆனால் யாரும் இதில் காயம் அடையவில்லை எனக் கூறப்படுகிறது. நிலைமையை காவல்துறை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்து வருவதாக காங்கிரஸ் வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறி ஓடி செல்வது போன்றும் காவல்துறை அதிகாரிகள் இதை பார்த்து கண்டு கொள்ளாமல் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதியில் இருந்து மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 11 மாதங்களாக அங்கும் இங்குமாய் வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வாக்குப்பதிவு நடக்கும் அதே நாளில் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர்:
மணிப்பூரில் மொத்தம் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், இன்னர் மணிப்பூர் தொகுதிக்கு இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. ஆனால், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் வரும் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
சுராசந்த்பூர் மற்றும் சந்தேல் மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. குக்கி மற்றும் மெய்தேய் சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை இந்த இரண்டு மாவட்டங்களை நிலைகுலைய வைத்தது. அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹீரோக், வாங்ஜிங் டெந்தா, கங்காபோக், வாப்காய், கக்சிங், ஹியாங்லாம், சுக்னூ, சண்டல் (எஸ்டி), சைகுல் (எஸ்டி), காங்போக்பி, சைட்டு (எஸ்டி), ஹெங்லெப் (எஸ்டி), சுராசந்த்பூர் (எஸ்டி), சைகோட் (எஸ்டி), மற்றும் சிங்கத்(எஸ்டி) தொகுதிகள் இதில் அடங்கும்.
அவுட்டர் மணிப்பூர் தொகுதிக்கு உட்பட்ட 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.