வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கலவரமும், அதன்பின்பு அங்கு அரங்கேறியுள்ள பதற்றமான சூழலும் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் கலவரம்:
உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையிலும் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தீக்கிரையாகி பற்றி எரியும் மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் இயங்க துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிடங்களுக்கு தீ:
பொது மக்கள் இன்று காலை முதலே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் நடமாடத் துவங்கினர். கடந்த 12 மணி நேரத்தில் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கலவரக்காரர்கள் வேண்டுமென்றே கட்டிடங்களை தீயிட்டு கொளுத்தினர். கலவரத்தில் சிக்கிய பலர் ரிம்ஸ் மற்றும் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் முழுக்க சுமார் 10 ஆயிரம் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தால், கடந்த 3-ஆம் தேதியில் இருந்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இவர்களுக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மெய்டீஸ் பழங்குடியினர்:
இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. மணிப்பூரிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட ஆண்டுகளாக போராடி வருகின்றனர்." என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடித்ததால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.