மணிப்பூரில் மீண்டும் ஒரு வன்முறை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளாக சந்தேகிக்கப்படுவோர் நடத்திய இந்த தாக்குதலில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கோகன் கிராமத்தில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.


மணிப்பூரில் ஓயாத வன்முறை:


கோகன் கிராமம் காங்போக்பி மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளும், பலியானவர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 


இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விவரித்துள்ள காவல்துறை தரப்பு, "தாக்குதல் நடத்தியவர்கள் ராணுவத்தை போல் வேடமிட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி, ராணுவம் பயன்படுத்தும் வாகனங்களை போன்ற ஒரு வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை கோகன் கிராமத்திற்குச் சென்ற அவர்கள், தங்களுடைய தானியங்கி துப்பாக்கியால் கிராம மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்"


இதுகுறித்து பழங்குடி தலைவர்கள் மன்றம் வெளிட்ட அறிக்கையில், "இந்த தாக்குதல் பிரிவினைவாதிகள் காட்டி வரும் அலட்சியத்திற்கு மற்றொரு உதாரணம். குற்றவாளிகளுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அமைதி ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக் கொலை:


பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டோம்கோஹோய் அதிகாலை பிரார்த்தனையில் இருந்தபோது தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுவரை கலவரம் தொடர்பாக மொத்தம், 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வராததது போல் தெரிகிறது. வன்முறை நாளுக்கு நாள் அதிகமாக, அங்கு அமைதி திரும்பாத நிலையில் உள்ளது. இதனால், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


சமீபத்தில் கூட, குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல்  கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 


மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஆறு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சதிச் செயல் ஏதேனும் நடந்திருக்கிறதா என்பதை ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.