மணிப்பூர் வழக்கு:


மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, "இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்" என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் எச்சரித்திருந்தார்.


இதை தொடர்ந்து, மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம் பல அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது.  குறிப்பாக, நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடி பெண்களே உச்ச நீதிமன்றத்தில், தங்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறி, மனு தாக்கல் செய்திருந்தனர்.


6,532 எஃப்ஐஆர் பதிவு:


இந்த வழக்கு விசாரணையின்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மணிப்பூரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை மீது துரித நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மணிப்பூரில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 37 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு பெண்கள் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


உச்சநீதிமன்றம் கேள்வி:


இதனை தொடர்ந்து, ”வன்முறை தொடர்பாக 6,000-க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 50 மட்டும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்படி என்றால் மற்றவற்றின் நிலைமை என்ன ? மணிப்பூர் மாநில காவல் துறையினர் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எப்படி நம்புவது? மணிப்பூர் காவல்துறையினர் தங்களது பொறுப்புகளை செய்யாமல் இருந்துள்ளனர்.  அதை செய்ய அவர்களுக்கு தகுதி இல்லையா? அல்லது ஆர்வம் இல்லையா?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும், "விசாரணை எதுவும் முழுமையாக நடைபெற்றதாக தங்களுக்கு தெரியவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிக தாமதம் ஏற்பட்டு இருக்கிறது . கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை வாக்குமூலங்கள் பதிவு செய்வது கூட இன்னும் முடிவடையவில்லை. பெண்களுக்கு எதிராக வன்கொடுமை நடந்து இரண்டு மாதங்கள் ஆகிறது ஒரு FIR கூட பதிய முடியவில்லையா? மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்? பாதுகாப்பு அடைக்கலம் கேட்டு வந்த பெண்களை காவல்துறையினரே வன்முறை கும்பலிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த காவல்துறையினரிடம் டிஜிபி விசாரணை நடத்தினாரா?” என்று தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார். 


டிஜிபி ஆஜராக உத்தரவு:


இதனை அடுத்து, மணிப்பூர் மாநில டிஜிபி, ஆகஸ்ட் 7ஆம் தேதி (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி மணிப்பூர் வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.