மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்தாண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.


மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள்:


கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் நடந்த இனக்கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், இங்கும், அங்குமாய் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.


இந்த நிலையில், மணிப்பூரில் காவல்துறை உயர் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரம்பை தெங்கோல் என்ற மெய்தி அமைப்பு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம், இம்பால் கிழக்கில் உள்ள கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மொய்ரங்தம் அமித்தின் வீட்டுக்குள் ஆயுதம் ஏந்திய பெரும் கும்பல் சென்றது.


பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை திருடி சென்றதாக செக்மாய் பகுதி அரம்பை தெங்கோல் அமைப்பின் தலைவர் ராபினை காவல்துறை கைது செய்தது. இவரை விடுவிக்க கோரிதான், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் 200க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.


ஆயுதங்களை துறந்து கமாண்டோக்கள் போராட்டம்:


அப்போது, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மொய்ரங்தம் அமித்தையும் அவரது பாதுகாவலர் ஒருவரையும் ஆயுதம் ஏந்தியவர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், குவாகீதெல் கோன்ஜெங் லைகை பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ராஜ் மெடிசிட்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


காவல்துறை அதிகாரி கடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணிப்பூர் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகள், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காவல்துறை அதிகாரிகளின் மன உறுதி பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசு சாரா அமைப்பும் எங்களுக்கு ஆதரவாக வரவில்லை. எங்களின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளது. விஷமிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எங்களுடைய அதிகாரிகளே எங்களை ஆதரிக்க மறுக்கிறார்கள். தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரியும் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்தான்" என்றார்.


இதையும் படிக்க: Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் - வீடியோ வைரல்