மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் மனசாட்சியை உலுக்கிய மணிப்பூர் இனக்கலவரம்:
இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.
மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பட்சோய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நியூ கெய்தெல்மன்பி பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணி அளவில் நடந்துள்ளது.
வீடுகளை கொளுத்திய விஷமிகள்:
வீட்டை கொளுத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டதாகவும் தற்போது அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. வீடுகள் கொளுத்தப்பட்ட தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையும் தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மெய்தெயி சமூக பெண்கள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தற்போது கூடுதல் படைகள் குவிக்கப்பட்டதாகவும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, 19 காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மலைப்பகுதிகள் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
பள்ளத்தாக்கு பகுதிகளில் AFSPA-வை நீட்டிக்காமல் மலைப்பகுதிகளில் மட்டும் நீட்டிததற்கு ஆட்சேபனை தெரிவித்து பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மணிப்பூர் முதலமைச்சர் வீட்டின் உள்ளே கும்பல் ஒன்று நுழைய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.