கடந்த 2014ஆம் ஆண்டு முதல், மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகின்றன. 


வரப்போகும் ஐந்து மாநில தேர்தல்:


இதற்காக, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன்விளைவாக, I.N.D.I.A. என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி உருவானது. 


இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்னும் ஒரு மாதத்தில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.


இந்த நிலையில், வரும் அக்டோபர் 9ஆம் தேதி, டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.


பாஜகவை எதிர்க்க உத்தி என்ன? 


நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் மகளிர் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஐந்து மாநில தேர்தலுக்கான பிரச்சார களத்தில் இந்த விவகாரங்களில் காங்கிரஸ் வகுக்க வேண்டிய உத்தி குறித்து வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர். கடைசியாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.


காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸே ஆட்சியை தக்க வைக்கும் என ஹைதராபாத் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "சட்டம் ஒழுங்கு, சுதந்திரம், சமூக மற்றும் பொருளாதார நீதி, சமத்துவம் தொடர்பான விவகாரங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்" என குறிப்பிடப்பட்டது.


இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "தெலங்கானா மிகவும் வளமான மாநிலமாக மாறுவதற்கு காங்கிரஸ் ஆறு உத்தரவாதங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த வாக்குறுதிகள், வசதி குறைந்தவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதையும், ஒதுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதையும், அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன" என்றார்.