கடந்த நவம்பர் மாதம், ஏர் இந்தியா விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பில் மது அருந்திய பயணி ஒருவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதுவரை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என டெல்லி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து விவரித்த காவல்துறை, "குற்றம் சாட்டப்பட்டவர் மும்பையில் வசிப்பவர், ஆனால், அவரது இருப்பிடம் வேறு ஏதேனும் மாநிலத்தில் இருக்கலாம். போலீஸ் குழு அங்கு சென்றடைந்துள்ளது. குற்றவாளியை விரைவில் கைது செய்வோம்.
சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் நபரைப் பிடிக்க குழு அமைத்துள்ளோம்" தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, 509 மற்றும் 510, இந்திய விமானச் சட்டத்தின் பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் போலீஸார் இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரும் டெல்லியை சாராதவர்கள்.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி, நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பில், குடிபோதையில் பயணித்த பயணி, 70 வயது மதிக்கத்தக்க சக பயணியின் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் விமான பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார். தனது உடைகள், காலணிகள், பை ஆகியவை சிறுநீரில் நனைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். விமான குழுவினர் தங்களிடம் உடைகள் மற்றும் செருப்புகளை கொடுத்துவிட்டு இருக்கைக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, அந்த பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரனுக்கு அந்தப் பெண் கடிதம் எழுதியதை அடுத்துதான் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (டிஜிசிஏ) விசாரணையைத் தொடங்கிய நிலையில், அந்தப் பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய சூழ்நிலையை நிவர்த்தி செய்வதில் பணியாளர்கள் தவறிழைத்துள்ளனாரா என்பதை விசாரிக்க ஏர் இந்தியா ஒரு குழுவை அமைத்துள்ளது.
சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், டாடா குழுமத்தின் தலைவருக்கு அந்தப் பெண் கடிதம் எழுதியதை அடுத்துதான் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.