அந்தக்காலங்களில் ஒரு ஆண் இரு பெண்களை திருமணம் செய்வது அவ்வளவு ஆச்சரியமில்லாத ஒன்று. அப்படியான முதியவர்களை கிராமப்புறங்களில் இன்றும் காணலாம். ஆனால் இன்றைய நாட்களில் அப்படியான சம்பவங்கள் இல்லை. இந்நிலையில் கர்நாடகாவில் மாற்றுத்திறனாளியான அக்காவுக்கு, அவரது தங்கை திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்துள்ளார். அதாவது தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடமே தன் அக்காவையும் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் வேகமடுவே கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா. இவரது தங்கை லலிதா. சுப்ரியா வயதில் மூத்தவர் என்றாலும் அவரால் வாய்பேச முடியாது. மாற்றுத்திறனாளி என்பதால் அவரை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. சுப்ரியாவில் திருமணம் தடைபட்டுக்கொண்டே இருந்துள்ளது.இதற்கிடையே லலிதாவுக்கு வரன் பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. உபாபதி என்ற இளைஞருக்கும், லலிதாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தன்னுடைய அக்காவுக்கும் திருமண வாழ்க்கையில் பங்கு கொடுப்பது என லலிதா ஒரு முடிவை எடுத்துள்ளார்.
இது குறித்து உமாபதியிடம் பேசிய லலிதா, தனது அக்காவையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார். லலிதாவின் கோரிக்கையை உமாபதி மறுத்துள்ளார். ஆனால் அக்காவை திருமணம் செய்தால்மட்டுமே தானும் திருமணம் செய்துகொள்வேன் என லலிதா விடாப்பிடியாக இருந்துள்ளார். பின்னர் உமாபதி தலையசைக்கவே இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே மேடையில் அக்கா சுப்ரியா, தங்கை லலிதா இருவரையும் உமாபதி திருமணம் செய்துகொண்டார்.
திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவின் கதை, கோலார் பகுதியில் மட்டுமின்றி இணையத்திலும் வைரலானது. லலிதாவின் திருமண முடிவு குறித்து பலரும் பலதரப்பட்ட கருத்துகளை பதிவிட்டனர். இந்த திருமணம் போலீசார் காதுகளுக்கும் செல்ல தற்போது உமாபதி சிக்கலில் சிக்கியுள்ளார். உமாபதி திருமணம் செய்துகொண்ட லலிதா மைனர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மைனரை திருமணம் செய்த காரணத்தினால் மாப்பிள்ளை உபாபதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருமண விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரு வீட்டாரும் தற்போது தவித்து வருகிறார்கள்.