பெருந்தொற்று காலத்தில், முதலாதவதாக உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள் என பாலிவுட் பிரபலமான நடிகை கரீனா கபூர் அறிவுரை கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது இந்த கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தத் தொடங்கி. பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடி இயல்பு வாழ்க்கையையே மறக்கச் செய்துவிட்டது. முகக்கவசம் வழியாக சுவாசிப்பது புதிய இயல்பாகிவிட்டது. வேலையிழப்புகள், பொருளாதார நெருக்கடிகள் துரத்துவதால் மக்கள் அழுத்தத்துக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தமாதிரியான சூழலில் இரும்பு மனம் கொண்டோரும் கலங்காமல் இருந்துவிட முடியாது. அதனாலேயே கொரோனாவால் ஏற்படும் மனஅழுத்தங்களைத் தீர்த்துக் கொள்ள மனநல ஆலோசகர்களை நாடும் மக்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது.

 

இந்த அழுத்தத்தைத் தவிர்க்க பிரபலங்கள் பலரும் ஆலோசனைகள் கூறிவருகின்றனர். அந்த வரிசையில் கரீனா கபூரும் தன் பங்குக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். கொரோனா ஏற்படுத்தும் மன அழுத்தம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் எழுதியிருப்பதாவது: "பெருந்தொற்று காலத்தில் உங்கள் மீது நீங்களே அன்பாக இருங்கள். எப்போதெல்லாம் மனது அழுத்தமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உங்களின் நேசத்துக்குரியவர்களை தொடர்புகொண்டு பேசுங்கள். அதையும் தாண்டி நெருக்கடி ஏற்பட்டால் தாமதிக்காமல் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். இறுக்கம் அகல காலம் தேவைப்படும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்" என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தனது மகன் தைமூருக்கு கொரோனா பெருந்தொற்று குறித்தும் தடுப்பு மருந்து குறித்தும் சொல்லிப் புரியவைத்ததாகக் கூறியிருக்கிறார்.

 



 

இது தொடர்பாக அவர், "டிம்மிடம் நாங்கள் கொரோனா தொற்று பற்றி பேசினோம். குழந்தைகள் சுற்றிலும் நடப்பதைக் கவனிக்கின்றனர். அவர்கள் அச்சத்திலும் இருக்கின்றனர். அதனால், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரியவர்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தோம். அது அவனுக்கு புரிந்தது என நாங்கள் நம்புகிறோம். ஆனால் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்வதைப்போல், நாம் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். நமக்கு உதவும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்யுங்கள். கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடையுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.