Zomato: பிரபல உணவு நிறுவனமான சோமோட்டாவில் சைவ உணவு ஆர்டர் செய்தவர்களுக்கு அசைவ உணவுகளை சோமோட்டோ நிறுவனம் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஆன்லைன் உணவு டெலிவரியில் தவறான ஆர்டர்கள் வருவது புதிதல்ல. நிறைய பேருக்கு அவர்கள் செய்த ஆர்டர் அப்படியே மாறி வேறு ஒரு ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் அண்மையில் ஒரு சோமாட்டோ ஆர்டர் குறித்த புகார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  அதன்படி,  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு நபர் 1,228 ரூபாய்க்கு பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக சிக்கன் பிரியாணி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரின் நண்பரான அஸ்வினி ஸ்ரீனிவாசன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  அதன்படி, "எனது நண்பர் வாரணாசியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல உணவகமான பெஹ்ரூஸ் பிரியாணி கடையில் ரூ.1,228-க்கு பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் செய்த பன்னீர் பிரியாணிக்கு பதில் சிக்கன் பிரியாணி வந்துள்ளது. அவர்களது குடும்பம் ஒருபோதும் அசைவு உணவு சாப்பிட்டதில்லை. ஆரம்பத்தில் பன்னீர் என்று நினைத்து தான், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிக்கனை சாப்பிட்டுள்ளனர்.

Continues below advertisement

சாப்பிட்ட பிறகு தான் சிக்கன் என்று தெரியவந்தது. அவர்கள் சாப்பிட்ட பிறகு கோயில் செல்லலாம் என்று நினைத்தனர். இதுபோன்று ஆர்டர் செய்த பன்னீர் பிரியாணிக்கு பதில் சிக்கன் பிரியாணி வந்தது வேதனையாக இருக்கிறது. உடனே டெலிவரி செய்யப்பட்ட நபரை தொடர்புகொண்டு கேட்டபோது, சம்பந்தப்பட்ட உணவகத்திடம் பேச வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட உணவகமும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு யார் தான் பொறுப்பு?" என்று அவர் கூறினார். 

இருப்பினும் சோமாட்டோவுக்கு ஆதரவாகப் பலர் அதில் பதில் அளித்திருந்தனர். சிலர்,”இதற்காக நீங்கள் சோமேட்டோவை எப்படிக் குற்றம்சாட்ட முடியும்? இதற்கு பெரும்பாலான சமயங்களில் தொடர்புடைய ஓட்டல்கள்தான் காரணமாக உள்ளன. சோமேட்டோவை எப்படி குற்றம் சாட்ட முடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.