எலியை சித்திரவதை கொலை செய்த 34 வயது நபர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


உத்தரப் பிரதேசம், பதவுன் நகரைத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் எனும் இந்நபர் மீது முன்னதாக விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நபரிடம் காவல் துறையினர் சுமார் 10 மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ஐஏஎன்எஸ் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி,  குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் குமார் தனது குழந்தைகள் முன் எலியை நீரில் முக்கி சித்திரவதை செய்ததாக விக்கேந்திர ஷர்மா எனும் விலங்கு நல ஆர்வலர் முன்னதாகப் புகார் அளித்துள்ளார்.


"மனோஜ் குமார் எலியின் வாலில் கல்லைக் கட்டி நீரில் மூழ்கடித்து துன்புறுத்தியதை நான் கண்டேன். அவரை நான் அழைத்து இதுகுறித்து கேட்டபோது அச்செயலை மீண்டும் செய்வேன் என மனோஜ் குமார் பதிலளித்தார். நான் எலியை உயிருடன் மீட்க முயற்சித்தும் முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் முன்னதாக மனோஜ் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த காவலர்கள், எலிகள் 'விலங்குகள்' பிரிவின் கீழ் வராததால் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு வராது எனக்கூறி அந்நபரை விடுவித்துள்ளனர்.


ஆனால் இறந்த எலியின் உடலை புகார்தாரரிடமிருந்து பெற்று உடற்கூராய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு காவல் துறையினர் முன்னதாக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் எலியை உடற்கூராய்வு செய்ய மறுத்த நிலையில், பரேலியில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) எலியின் உடல் முன்னதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து முன்னதாகப் பேசிய காவல் துறையினர் உடற்கூராய்வு அறிக்கையை சமர்ப்பிக்க கால்நடை ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், இந்தப் பரிசோதனைக்கு வேண்டிய 225 ரூபாயை புகார்தாரரே செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.


முந்தைய சம்பவம்


இதேபோல் முன்னதாக அகமதாபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் உள்ள ஷாஹ்பூர் பகுதியில் ஒரு கும்பல் நாயை அடித்துக் கொன்று, அதன் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று சித்திரவதை செய்த இரண்டு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.


விலங்குகளை துன்புறுத்தும் வழக்குகளில் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக பிசிஏ சட்டம் 1960இல் திருத்தம் செய்ய வேண்டும் என ஏற்கெனவே விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலங்குகளை துன்புறுத்திய வழக்கில் தொடர்புடையவர்கள் வெறும் 50 ரூபாய் அபராதம் செலுத்தி தப்பித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.