மயிரிழையில் உயிர் பிழைத்தார் என்று செய்திகளில் வாசித்திருப்போம். ஆனால் அப்படியொரு சம்பவம் அடங்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. திபான்ஷு காப்ரா என்ற ஐபிஎஸ் அதிகாரி அந்த படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த சிசிடிவி காட்சியில்  ஒரு நபர் டிரக்கில் மோதுவதில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைக்கிறார். இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.


மோட்டார் சைக்கிள் ஓட்டும் நபர் ஒருவர் வேகமாக சாலையை கடக்கிறார். அப்போது ஒரு டிரக் வேகமாகக் கடக்கிறது. அது கிட்டத்தட்ட அந்த நபர் மீது மோதுகிறது. இருப்பினும் அந்த நபர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்து விடுகிறார்.
அந்த வீடியோவை பகிர்ந்துள்ள காவல் அதிகாரி நீங்கள் எப்போது வாகனம் ஓட்டினாலும் விபத்து நடக்காத வண்ணம் மிதமான வேகத்தில் ஓட்டுங்கள். அது உங்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது.


அந்த வீடியோவின் கீழ் ஒருவர், 90 சதவீத இருசக்கர வாகன விபத்து அதை ஓட்டுபவர்களால் தான் நடக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






விபத்து புள்ளிவிவரம்:


இந்தியாவில் சாலை விபத்தில் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒருவர் பலி; இரண்டு நிமிடங்களுக்கு இருவர் காயம் அடைகின்றனர் என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.


தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையை ஆராய்ந்து பார்த்தால், அதில் இந்தியாவில் ஒவ்வொரு 6 நிமிடமும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் அதுவும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி நடக்கும் விபத்தில் உயிரிழக்கிறார். அதேபோல் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு இருவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் காயமடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புள்ளிவிவரத்தின் படி கடந்த ஆண்டு (2021) வேகமாக வாகனம் ஓட்டி நடந்த விபத்துகளில் 87,050 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள் 11,190 பேர் உயிரிழந்தனர். 2,28.274 பேர் காயமடைந்தனர். நாட்டில் 60 சதவீதம் சாலை விபத்துகளுக்கு அதி வேகத்தில் வாகனத்தை இயக்குவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4,03,116 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதுவே 2020 ஆம் ஆண்டில் 3,54,796 ஆக இருந்தது. அதேபோல் 2021ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,55,622 ஆக அதிகரித்துள்ளது. 2020ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,33,201 ஆக இருந்தது.


2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன. இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர். மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 33.3 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது.