ஆந்திராவில் 24 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் பிச்சைக்காரர் ஒருவருக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது. 


இந்தியாவில் வேலை தேடி அலையும் பட்டதாரிகள் ஒருபுறம் என்றால் அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் மறுபக்கம் இருக்கவே செய்கிறார்கள். குறைந்த இடங்களுக்கு ஏராளமான போட்டித் தேர்வாளர்கள் களமிறங்குவதால் அனைவருக்கும் அரசு வேலை என்பது கனவாகவே உள்ளது. பலருக்கும் நூழிலையில் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போன கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். 


இதுதொடர்பான கதைகளையும் நாம் சினிமாவில் பார்த்திருப்போம். நடிகர் கரண் நடித்த “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தில் அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருந்து கடைசியில் தவறான பாதையில் சென்றதால் பார்வையிழந்த பின் அவர் தேடிய அரசு பணிக்காக ஆணை வந்திருப்பது போன்ற கதை இடம் பெற்றிருக்கும்.இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்றாலும் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி ஆணை கிடைக்காமல் இருப்பது உண்மையிலேயே கடினமான ஒன்று தான். 


அதேமாதிரி சம்பவம் ஒன்று ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பதப்பட்டினத்தின் பெத்தா சித்தி பகுதியைச் சேர்ந்த அல்லகா கேதாரேஸ்வர ராவ்  ஆங்கிலத்தில் எம்.ஏ மற்றும் இளங்கலை பி.எட். படிப்பை முடித்துள்ளார். ஆனாலும் தனது பெற்றோர்களைக் காப்பாற்ற சைக்கிளில்  ஆடைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு அரசு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான டிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். 






ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களால் 24 ஆண்டுகளாக பணி ஆணை கிடைக்காமல் இருந்துள்ளது. அதற்குள் கேதாரேஸ்வர ராவ் பெற்றோரை இழந்து,உடன் பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டதால் பிச்சைக்காரராக மாறியுள்ளார்.தற்போதைய முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளதால்  அந்த பேட்சில் டிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 


அந்த வகையில் கேதாரேஸ்வர ராவுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முடி திருத்தம் செய்து புதிய ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து ஆசிரியராக மாறியுள்ளார். மேலும் ஓய்வுபெறும் வயதில் பணி ஆணை வந்திருந்த போதும் தான் ஆசிரியராக பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கேதாரேஸ்வர ராவ் கூறியுள்ளார். 


கடந்த 1998 ஆம் ஆண்டு 12,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டிஎஸ்சி தேர்வின் மூலம் அரசு ஆசிரியராக தகுதி பெற்றனர்.ஆனால், அவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படவில்லை. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு பணியிடங்களை வழங்கக் கோரி  பலமுறை போராட்டங்களில் பங்கேற்று எந்த பதிலும் அரசிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை.  இதற்கிடையில் DSC-1998 கோப்பு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களில் 40 முதல் 60 சதவீதம் பேர் ஓய்வு பெறும் வயதைக் கடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 


மேலும் 10 சதவீத விண்ணப்பதாரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண