உத்தரப்பிரதேசத்தில் பேண்ட் வாத்திய குழுவால் கல்யாண வீடு கலவர பூமியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது திருமணங்கள் பற்றி நம் அனைவருக்குமே விதவிதமான கனவுகள் இருக்கும். உடைகள் தொடங்கி ஹனிமூன் வரை எல்லாமே பக்காவாக பிளான் செய்திருந்தாலும் சில நேரம் அது சொதப்பி விடக் கூடாது என கண்ணும் கருத்துமாக செயல்படுவது வழக்கம். அதேபோல் வந்திருந்த சொந்தங்கள், நண்பர்களை வரவேற்று உபசரிப்பதில் அனைவரும் கவனம் எடுக்க வேண்டும். அப்படியான திருமணங்களில் இசை கச்சேரிகள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இடம் பெறுவது வழக்கம்.
ஆனால் அத்தகைய திருமணம் பேண்ட் வாத்தியத்தால் நின்றுப் போன சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் மிர்சாபூரில் தர்மேந்திரா என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் திருமண நாளன்று ஃபரூகாபாத்தில் உள்ள கம்பில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்திய குழுவுடன் தர்மேந்திரா மிகப்பெரிய கனவுடன் உற்சாகமாக வந்துள்ளார். மண்டபத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகன் தரப்பிடம் பேண்ட் வாத்திய குழு பணம் கேட்டுள்ளனர்.
நடுவானில் விமானத்தில் இளம்பெண் செய்த செயல்...முகம் சுழித்த மக்கள்..வைரல் வீடியோ
அதற்கு நீங்கள் சென்று பெண் வீட்டாரிடம் பணம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் என மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண் வீட்டாரிடம் கேட்ட போது நாங்கள் ஒன்றும் பேண்ட் வாத்தியத்தை அழைத்து வரவில்லை என்றும், அதனால் பணம் தர முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருமண வீடு கலவர பூமியாக மாறியுள்ளது. இருதரப்பும் கைக்கலப்பில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பானது.
பேண்ட் வாத்தியத்திற்கு பெண் வீட்டார் பணம் கொடுக்க சம்மதிக்காததால் கோபமடைந்த மணமகன் தர்மேந்திரா மண மேடையில் இருந்து எழுந்து வெளியேறியதோடு மட்டுமல்லாமல் திருமணத்தை நிறுத்தும்படி தெரிவித்தார். மேலும் தான் அணிந்திருந்த செயினையும் அவர் அறுத்து எறிந்தார். இப்படி பேண்ட் வாத்திய குழுவால் திருமணம் நின்று போன சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்